பக்கம்:கபாடபுரம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

119

தளத்தில் நின்றுகொண்டிருந்த இளையபாண்டியனை அணுகித் தென்பழந்தீவுகள் பற்றிய திசை விவரங்களும், குறிப்புக்களும், வரையப்பட்டிருந்த திரைச்சீலையைப் பிரித்துக் காண்பிக்கலானான் முடிநாகன். இளையபாண்டியனுடைய கவனமும் அப்போது அதில் சென்றது. போது இருட்டுவதற்குள் எயினர் தீவுகளின் ஒருமுனையான மரங்கள் அடர்ந்த மலைப் பகுதியை அடையலாம் என்று திரைச்சீலையிற் கண்ட விவரங்களிலிருந்து தெரியவந்தது.

"நம்முடைய கபாடபுரத்துத் தேர்க்கோட்டத்தில் உருவாகும் தேர்களுக்கு வேண்டிய வைரம் பாய்ந்த தேர்ச் சட்டங்களும், மரங்களும், இந்தத் தீவிலிருந்துதான் நமக்குக் கிடைக்கின்றன" என்று அந்தத் தீவைப்பற்றி விளக்கத் தொடங்கினான் முடிநாகன். பயணத்தின் உற்சாகமும், கடற்பரப்பின் கருநீல அழகும், வெயிலே தெரியாத மங்கலான வானமும், இளையபாண்டியனின் உள்ளத்தில் களிப்பு நிறையச் செய்திருந்தன. அவனுடைய இதழ்களில் மனத்தின் களிப்பை வெளிக்காட்டுவதுபோல் இசை பிறந்தது. அந்த இசையால் கப்பல் ஊழியர்கள்களைப்பை எல்லாம் மறந்தனர். முடிநாகனும் அதை இரசிக்கலானான்.


17. வலிய எயினன் வரவேற்பு

அந்தி மயங்குகிற வேளையில் ஏதிரே தொடுவானமும் கடற்பரப்பும் சந்திக்கிற விளிம்பில் கருங்கோடுபோல் ஒரு வரைவு தெரிந்தது. அருகில் நெருங்க நெருங்க, மரங்களின் வடிவம் மலையும் மெல்லத் தெரியலாயின. தூரதிருஷ்டிக் கண்ணாடி பதித்த கருவியினால் பார்த்துவிட்டு "தீவு நெருங்குகிறது" என்று அறிவித்தான் முடிநாகன். இளையபாண்டியன் அந்தக் கருவியை வாங்கித் தொலைவில் தெரிவதைப் பார்த்தபோது, வானளாவிய மரங்கள் செறிந்த மலை ஒன்று கண்களில் தெரிந்தது. அவ்வளவு உயரமாகவும், பருமனாகவும், செழிப்பாகவும், அடர்த்தியாகவும் மரங்கள் செறித்திருந்த மலையைப் பார்ப்பதே மகிழ்ச்சியாயிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/121&oldid=490047" இலிருந்து மீள்விக்கப்பட்டது