பக்கம்:கபாடபுரம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

கபாடபுரம்


எழுந்துவிடாமலும் எதை விரும்பித் தவிர்க்க முயல்கிறோமோ 'அதை மட்டும் ஏன் தவிர்க்க முயல்கிறோம்?' - என்ற சந்தேகம் எதிரிக்கு ஏற்படாமலும் பேசுவதுதான் இராசதந்திரப் பேச்சு. இத்தகைய பேச்சுக்களைப் பயிலவும், பழகவுமே பெரியபாண்டியர் தங்களை இந்தச் சுற்றுப் பயணத்திற்கு அனுப்பியிருக்கிறார் என்பது இருவருடைய மனத்திலும் மேலெழுந்து நின்ற காரணத்தினால் இருவருமே அதைச் செம்மையாகச் செய்ய முடிந்தது.

பகல் நேரத்திலும் வெயில் உள்ளே நுழையமுடியாதபடி அடர்ந்து செறிந்திருந்த காடுகளாலான அந்தத் தீவில் காட்டு விலங்குகளின் தொல்லைகளிலிருந்து விடுபடக் கருதியோ, என்னவோ குடியிருப்புக்களை எல்லாம் மரங்களின் உச்சியில் அமைத்திருந்த பரண்களில் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். அந்தத் தீவில் செழித்து வளர்ந்திருந்த ஒருவகைப் புல்லினால் குடிசைகள் அழகுற வேயப்பட்டிருந்தன. முடிநாகனும், சாரகுமாரனும், தங்குவதற்குக்கூட அப்படி இரண்டு பரண்களிலமைந்த புல்வேய் குரம்பைகளே கிடைத்தன. உயர்ந்த மரக்கிளைகளில் வைரம்பாய்ந்த பல கைகளைப் பதித்துப் பசுமைச் சூழலில் தொங்குவதுபோல் அமைக்கப்பட்டிருந்த அந்தக் குடிசைகளில் தங்குவதற்கு இதமாக இருந்தது. நீருள் அமிழ்ந்திருப்பதுபோன்ற தண்மை அங்கு நிலவியது. அந்தத் தண்மையின் சுகத்தினாலும், பயணம் செய்துவந்த களைப்பினாலும் முடிநாகன் நன்றாக உறங்கிவிட்டான்.

இளையப்ாண்டியனுக்குத்தான் உறக்கமே வரவில்லை. அந்த இயற்கையழகின் தூண்டுதலில் கண்ணுக்கினியாளின் நினைவு வந்தது அவனுக்கு. 'உண்மை அன்பிற்கும், பரிவிற்கும்தான் எத்தனை பெரிய சக்தி? நினைப்பதிலும் காண்பதிலும், சிந்திப்பதிலும், எல்லாவற்றிலும் நம்முள் பொங்குகிற பரிவின் மற்றொரு நுனியிலிருப்பவர்களே நமக்கு ஞாபகம் வருகிறார்களே?' என்றெண்ணி வியந்தான் அவன். மரங்களும், செடிகளும், கொடிகளுமாக ஒரே மனத்தின் பல உணர்வுகளைப்போல் நெருங்கிப் பிணைந்திருந்ததனால் அவன் அமர்ந்திருந்த பரணில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/128&oldid=490054" இலிருந்து மீள்விக்கப்பட்டது