பக்கம்:கபாடபுரம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

127


காட்டின் பசுமை மணம் கம்மென்று தொகுதியாகப் பரவியிருந்தது. 'பூக்களின் நறுமணம் நமக்குப் பிரியமானவர்களின் ஞாபகத்துக்கு ஒரு துதுபோல வாய்க்கும்' என்று அகப்பொருள் இலக்கணத்தில் ஏதோ ஒரு துறைக்கு விளக்கம் கூறுகிறபோது ஆசிரியர் கூறியது நினைவு வந்தது அவனுக்கு.

அந்தத் தண்மை அந்த இயற்கையின் மலர்ச்சி, அந்த இரவின் ஏகாந்தம், யாவும் கண்ணுக்கினியாளையே எண்ணச் செய்தன. சிலருடைய நினைவு ஞாபகத்தின் ஒரு மூலையில் இருக்கும். வேறு சிலருடைய நினைவு ஞாபகத்தின் ஒரு பாதியாக இருக்கும். இன்னும் சிலருடைய நினைவே ஒரு ஞாபகமாக இருக்கும். மனத்தின் அந்தரங்க கீதங்களாகப் பெருகிப் பல்லாயிரம் பண்களை ஒலிக்கும் இங்கித நினைவுகள் சிலவும் இதயத்திற்கு உண்டு. அந்த நினைவுகள் குருதியும் சதையுமாக இதயத்தோடு பிணைந்தவையாக இருக்கும். கண்ணுக்கினியாளைப் பற்றிய நினைவும் அவனுள் அப்படித் தவிர்க்க முடியாததாகவே இருந்தது. இயற்கையழகு மிகுந்த அந்தக் குளிர்ந்த வனத்தில் அவளை நினைப்பதற்கு என்றே இரவெல்லாம் விழித்திருந்தாலும் தகும் என்பதுபோலிருந்தது அவன் நிலை. 'மனித இதயத்திற்குள் கரைகொள்ளாத் தவிப்பாக நிரம்பியிருக்கும் ஏதோ ஒர் உணர்வுதான் அவன் பாடும் இசையாகிறது' என்று இசைநுணுக்கங்களைக் கற்பிக்கும்போது ஆசிரியர் சிகண்டியார் இடைக்கிடை கூறுவதுண்டு. கண்ணுக்கினியாளின் இசையும் நளினமான குரலும் ஞாபகம் வருகிற வேளைகளில் எல்லாம் சிகண்டியார் கூறும் இந்த வாக்கியத்தையும் உடனிகழ்சியாகச் சேர்த்தே நினைத்திருக்கிறான் அவன்.

'கண்ணுக்கினியாள்
செவிக்கினியாள்
பண்ணுக் கினியாள்
பலப் பலவாய் மன
எண்ணுக் கினியாள்' என்று
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/129&oldid=490055" இலிருந்து மீள்விக்கப்பட்டது