பக்கம்:கபாடபுரம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

கபாடபுரம்


அவளைப்பற்றி நிறைவேறியவரை அப்படியே நின்று மேலே நிறைவேறாத கவிதையொன்றும் அவனுள் முகிழ்த்திருந்தது.

அடர்ந்த காட்டினிடையில் இடைவெளிகளில் புகமுயலும் காற்றின் உக்கிரமான ஓசையும், தொலைவில், அதிக அன்புக்குரியவரைப் பிரிய நேர்ந்துவிட்ட யாரோ வாயிலும் வயிற்றிலும் எற்றிக்கொண்டு கதறுவது போன்ற கடல் ஒசையும் ஒலித்தவண்ணமிருந்தன. எப்போது உறங்கத் தொடங்கினோம் என்று தனக்கே நினைவில்லாத வேளையில் உடல் களைப்பின் காரணமாகச் சோர்ந்து இளைய பாண்டியனும் உறங்கத் தொடங்கியிருந்தான். உறங்கத் தொடங்கிய உறக்கத்தையும், அதன் இனிய நினைவுகளையும், கனவுகளையும், வேகமாக யாரோ ஒடிவந்து கலைத்ததுபோல் வைகறை விரைந்துவந்து கலைத்துவிட்டது. வைரக் கற்களின் பட்டைகளில் இருந்து விதவிதமான ஒளிக்கீறல்கள் பாய்வதைப் போல் காலைக்கதிரவனின் கதிர்க் கற்றைகள் அந்த அடர்ந்த வனத்தில் நுழைய முயன்றன. இளையபாண்டியன் கண்விழித்தவுடன் அருகே பரணுக்குள் முடிநாகன் படுத்துறங்கிக் கொண்டிருந்த இடத்தைப் பார்த்தபோது அங்கே அவனைக் காணவில்லை. கீழே தரையைக் குனிந்து பார்த்தபோது அவன் அங்கே நின்றுகொண்டிருந்தான்.

அவர்கள் இருவரையும் நீராடல் முதலிய காலைக் கடன்களை ஆற்ற அழைத்துச் செல்லுவதற்காக எயினர் தலைவனால் அனுப்பப்பட்டிருந்த பணியாளன் ஒருவனும் பரணுக்கடியில் காத்திருந்தான். ஏற்கெனவே கீழே இறங்கிவிட்ட முடிநாகன் அந்தப் பணியாளனுடன்தான் பே இக் கொண்டிருந்தான். சாரகுமாரனும் கீழே இறங்கிப்போய் அவர்களோடு சேர்ந்துகொண்டான். பணியாள் அவர்கள் இருவரையும் பக்கத்துக் குன்றின் சரிவில் இருந்த ஓர் அருவிக்கு நீராட அழைத்துச் சென்றான். அந்த அருவின் பெயர் நாத கம்பீரம் என்று கூறியபோது பொருத்தமான அந்தப் பெயரை வியந்தான் சாரகுமாரன். பாறைகளிலும் கற்களிலும் துள்ளிக் குதித்து விழும் வேளையில் மத்தளம் கொட்டுவது போலிருந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/130&oldid=490056" இலிருந்து மீள்விக்கப்பட்டது