பக்கம்:கபாடபுரம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

கபாடபுரம்


கடமைப்பட்டிருக்கிறோம்" என்று தனக்கோ முடிநாகனுக்கோ அந்தத் தீவின் மேலும் தொடர்ந்து தங்கித் தெரிந்து கொள்ள எதுவுமில்லை என்பதுபோல் அசிரத்தையாகப் பேசிய பின்பே சாரகுமாரன் எயினர் தலைவனின் சந்தேகச் சிறையிலிருந்து மீள முடிந்தது.

அறிவுக்கூர்மை மிக்கவர்களின் சந்தேகங்களையாவது சொற்களால் தெளிவு செய்துவிடலாம். 'அறியாமையும் பிடிவாதமும் உள்ள நாட்டுப்புறத்து மனிதர்களின் சந்தேகங்களைச் சொற்களாலோ, சிந்தனைத் தெளிவினாலோ மட்டுமே தீர்க்கமுடியாது. சாதுரியம் மட்டுமே அப்படிப்பட்ட சந்தேகங்களைத் தீர்க்கமுடியும் என்பதைச் சாரகுமாரன் அந்த வேளையில் மிக நன்றாக உணர முடிந்தது. எயினர் தலைவன் தங்களுக்கு விடைகொடுத்து விட்டாலும் தங்களை வழியனுப்புவதிலும், தாங்கள், செல்லவேண்டிய வேறு தீவுகளுக்கு எப்படி எப்படிப் போகவேண்டுமென்று வழி சொல்லுவதிலும் அவன் அதிகமான சிரத்தை காண்பிக்க முன்வந்ததிலும் ஒரு சிறப்பான உள் நோக்கம் இருக்கவேண்டுமென்று தோன்றியது சாரகுமாரனுக்கு. அதை அவன் முடிநாகனிடம் கூறி விவாதிக்கவும் விரும்பவில்லை. அந்த உள்நோக்கத்தின் விளைவு விரைவில் தெரியுமென்றும் அவனுக்குத் தோன்றியது.

தங்களுடைய மரக்கலத்துக்கு வந்து பயணத்தைத் தொடங்கிய பின்பும் இதைப்பற்றித் தனிமையில்கூட அவன் முடிநாகனிடம் எதுவும் கூறவில்லை. மரக்கலத்தைச் செலுத்தும் மீகாமனும் பிற ஊழியர்களும் முடிநாகனும் செல்ல வேண்டிய திசையைக் குறித்துத் தங்களுக்குள் உரையாடத் தொடங்கியபோதும் இளையபாண்டியன் அதில் கலந்து கொள்ளவில்லை. 'இன்ன இன்ன திசையில் இப்படி இப்படி மரக்கலத்தைச் செலுத்திக்கொண்டு சென்றால் நீங்கள் செல்ல வேண்டிய தீவுகளுக்கு ஏற்றபடி வழி அமையும்' என்று விடைபெறும்போதும் எயினர் தலைவன் கூறிய வழிகளை இப்போது முடிநாகன் பிற ஊழியர்களிடம் நம்பிக்கையோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/138&oldid=490065" இலிருந்து மீள்விக்கப்பட்டது