பக்கம்:கபாடபுரம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

கபாடபுரம்


கையிலெடுத்துக் கொஞ்சியபடியே பாட்டனார் வெண்தேர்ச் செழியர் கூறிய அந்த ஒரு வாக்கியத்துக்கு ஈடான பொருட் செறிவுள்ள கவிதையை இன்னும் இயற்றமுடியவில்லையே என்று நீண்டகாலமாக ஏங்கியிருந்தார்கள் பாண்டிய நாட்டுப் புலவர்கள். சாரகுமாரனுக்கு இந்த அழகிய பெயரைச் சூட்டியவர்கூடப் பாட்டனார் வெண்தேர்ச் செழியர் தான். இந்தப் பெயரைச் சூட்டியதற்குக் காரணமாக மருமகள் (சாரகுமாரனின் தாய்) திலோத்தமையிடமும், மகன் (சாரகுமாரனின் தந்தை) அநாகுலனிடமும், பாண்டிய நாட்டுப் புலவர்களிடமும் முதியவர் வெண்தேர்ச் செழியர் கூறிய விளக்கம் பலமுறை நினைத்து நினைத்து இரசிக்கத்தக்க தாயிருந்தது. தேர்களைக் கட்டி வளர்த்த முதியசெழியரின் சிந்தனை சொற்களைக் கட்டி வளர்த்ததை அவர்கள் வியந்தனர்.

"இந்தச் சிறுவனைத் தொட்டுத் தழுவி உச்சி மோந்து பார்த்தால்கூட இவன் உடம்பு நமது மலய மலைச் சந்தனம் போல் மணக்கிறது. இவன் நிறமும் சந்தன நிறமாயிருக்கிறது. சந்தன மணத்தில் மிக உயர்ந்த பக்குவமான மணத்துக்குச் 'சார கந்தம்' என்று பெயர். சாரம் என்பதற்கு மிக இனியது - என்றும் ஒரு பொருள் உண்டு. இவனோ, தேனிற் செய்தாற் போன்ற இனிய குரலை உடையவனாயிருக்கிறான். பால் பசித்து அழுதால்கூட இனிய குரலில் அழுகிறான். இந்தத் தேசத்துக்கு எதிர்காலத்தில் இவன் மிகவும் பயன்படப் போகிறான். எனவேதான் இவையெல்லாவற்றையும் இணைத்து மனத்தில் கொண்டு இவனுக்குச் சாரகுமாரன் என்று பெயரிட்டேன்" - எனச் சமயம் நேரும் பொதெல்லாம் மற்றவர்களிடம் பெருமையாகச்சொல்லிக் கொள்வார் முதிய செழிய மன்னர்.

புலவர் பெருமக்கள் இந்தப் பெயர் விளக்கத்தை உணர்ச்சி பூர்வமாக இரசித்துக் கேட்பதுண்டு. பெரிய மன்னரின் மொழி நுட்பத்திறனை வியந்து பாராட்டுவதும் உண்டு. ஒளி நாட்டு மருமகள் திலோத்தமை - மாமனாரின் இந்தப் பெயர் விளக்கத்தைக் கேட்கும் போதெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/14&oldid=489913" இலிருந்து மீள்விக்கப்பட்டது