பக்கம்:கபாடபுரம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

கபாடபுரம்


முடிநாகனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் தனக்கு ஒன்றும் புரியாத பாவனையில் திகைப்போடு சாரகுமாரனின் முகத்தைப் பார்த்தான். சாரகுமாரனோ கடலைப் பார்த்தான். நான்குபுறமும் திரும்பித் திரும்பி எதையோ எதிர்பார்ப்பதுபோல் பார்த்தான். அதிலிருந்தும் முடிநாகனால் எதையும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அவனுடைய சந்தேகமும் தீரவில்லை. தெளிவும் பிறக்கவில்லை. அந்நிலையில் அவர்கள் மனநிலையைப்போல் இருளும் மயங்கத் தொடங்கியது.


21. ஒரு சோதனை

மரக்கலத்தில் தீப்பந்தங்கள் ஏற்றிப் பொருத்தப் பெற்றன. இருட்டிவிட்டதை உணர்வுக்குக் கொணர்வதுபோல் அந்தப் பந்தங்களின் ஒளி இருளின் செறிவைக் காட்டலாயிற்று. எங்கோ தொலைவில் அதே போன்ற ஒளியின் தூரத்துப் புள்ளிகள் தென்படத் தொடங்கின.

"வேறு மரக்கலங்களும் தென்படுகின்றன. இனி பயமில்லாமல் போகலாம்" என்றான் முடிநாகன்.

"அதெப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்லமுடியும்?" - என்று பதில் வந்தது இளையபாண்டியனிடமிருந்து.

"கடற்பகுதியின் இந்த இடங்களில் முந்நீர்க் கொள்ளைக்காரர்களாகிய கடம்பர்கள் மிகுதியாயிருப்பதாகச் சொல்வார்கள். தனிக் கப்பல்கள் சிக்கிக்கொண்டால் கடம்பர்கள் துணிவாகக் கொள்ளைக்கு வருவார்கள். கூட்டம் கூட்டமாக மரக்கலங்கள் செல்லும்போது அவர்கள் தொல்லை இராது" என்ற முடிநாகனின் பேச்சை இடைமறித்து,

"உன் கண்ணில் இப்போது தென்படும் மரக்கலங்களின் ஒளித் தோற்றத்தைக் கொண்டு மட்டுமே அவை நமக்கு வேண்டியவர்களின் மரக்கலங்கள் என்றோ நம்மைப் போல் யாத்ரீகர்களின் மரக்கலங்கள் என்றோ எப்படிக் கொள்ள முடியும்?" என்று கேட்டான் சாரகுமாரன். அதை மறுத்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/140&oldid=490068" இலிருந்து மீள்விக்கப்பட்டது