பக்கம்:கபாடபுரம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

139


சொல்லவும் முடிநாகனால் இயலவில்லை. இளைய பாண்டியனே மேலும் கூறத் தொடங்கினான். "நான் சொல்வதைக் கவனமாகக் கேள் முடிநாகா தென்பழந்தீவுகள் பலவானாலும் தீவுகளில் வாழ்பவர்களும், தீவுகளை ஆள்பவர்களும் கடற்கொலைஞர்களே. இனிவரப்போகும் எல்லாத் தீவுகளுக்கும் முன்வாயில் போன்ற இந்த எயினர் தீவிலேயே நாம் சந்தேகத்துக்கு ஆளாகிவிட்டோம். ஆயினும் தப்பி வந்தாயிற்று. நாம் அரச குடும்பத்துப் பிரதிநிதிகளா, அல்லது வெறும் யாத்திரிகர்களா? என்ற சந்தேகத்துடனேதான் எயினர் தீவின் தலைவன் நமக்கு விடைகொடுத்திருக்கிறான். இதை நினைவில் வைத்துக் கொண்டு பயணம் செய்தால்தான் நாம் நம்முடைய பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு திரும்பிப் போகமுடியும். ஆகவே இனி நாம் ஒரு காரியம் செய்ய வேண்டும்..."

"என்ன செய்யவேண்டும் என்றுதான் கூறுங்களேன்..."

"நம்மை யாத்திரிகர்களாகவே நிரூபிக்க வேண்டும். எப்படி யார் நம்முடைய பொறுமையைச் சோதித்தாலும் நமக்குக் கோபம் வரக்கூடாது. கோபம் வந்தால் தன்மான உணர்வு பெருகும். தன்மான உணர்வு பெருகினால் நம்மை வீரமரபினராக நிரூபித்துக்கொள்ளத் தோன்றுமே தவிர யாத்திரிகர்களாக நிரூபித்துக்கொள்ளத் தோன்றாது. போரிடும் உணர்வு வெளிப்படுமானால் 'உயர்ந்த அரசகுடும்பத்தைச் சேர்ந்த க்ஷத்திரியர்கள் இவர்கள்' என்று தெளிவாக நம்மைப் பற்றி மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். நாம் அதற்கு இடங்கொடுக்கக்கூடாது. ஆனால் அப்படிக் கோபதாபங்களுக்கு இடங்கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள்தான் இனி நிறைய வரும் என்று தோன்றுகிறது. வீரத்தையும் காட்டக்கூடாது. செல்வத்தையும் காட்டக்கூடாது. நம்மிடமிருக்கும் விலையுயர்ந்த கபாடத்து முத்துக்களை வலிய எயினனிடம் வழங்கியதுபோல் இனியும் தொடர்ந்து வழங்கிக்கொண்டே போகக்கூடாது என்று எனக்குத் தோன்றுகிறது. அதுவும்கூட ஒரு நிலைமைக்கு மேல் நம்மைச் சந்தேகத்துக்குரியவர்களாக்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/141&oldid=490069" இலிருந்து மீள்விக்கப்பட்டது