பக்கம்:கபாடபுரம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

கபாடபுரம்


காட்டிக் கொடுத்துவிடும். யாத்திரிகர்களிடம் எவ்வளவு முத்துக்கள் தான் இருக்க முடியும்?"

"இதைத்தான் நான் முன்பே கூறியிருக்கிறேனே? 'யாத்திரிகர்கள் என்ற போர்வைதான் நமக்குப் பாதுகாப்பானது. அதில் சந்தேகமேயில்லை. ஆனால் இவர்களுடைய அன்பையும் மதிப்பையும் பெற நம்முடைய கபாடத்து முத்துக்களை அளிப்பது பயன்படுமானால் நாம் அதற்குத் தயங்குவானேன்?"

"தயங்க வேண்டிய அவசியம் எயினர் தீவில் இறங்கிய வேளையில் நமக்கு இல்லை முடிநாகா! ஆனால் இனி அப்படித் தயங்கி ஆகவேண்டிய அவசியம் இருக்கிறது. நாம் சந்தேகத்திற்கு ஆளாக வேண்டியதாக நேர்ந்துவிட்டபின் தயக்கத்துக்குக் காரணமிருக்கிறது. நம்மை வழியனுப்பிய சுவட்டோடு எயினர் தலைவனே நாத கம்பீர ஆற்றின் முகத்துவார வழியே வேறிரண்டு கப்பல்களை அனுப்பி நம்மைச் சோதிக்க நேரிடலாம். அந்தச் சோதனையின்போது நாம் ஏமாறிவிடக்கூடாது என்பது தான் என் கருத்து."

"அப்படி ஒரு சோதனை நமக்கு வரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா இளையபாண்டியரே?" என்று முடிநாகன் வினாவி முடிக்கவும்,

"நிச்சயமாக நினைக்கிறேன்! அதோ எதிரே பார் புரியும்" - என்று பரபரப்போடு எதிர்புறம் சுட்டிக் காண்பித்தான் சாரகுமாரன். முடிநாகனும் அவன் சுட்டிக்காட்டிய திசையில் பார்த்து மலைத்தான். வழியே மறித்தாற்போல் கடலில் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மரக்கலங்கள் நிற்பதும் அவற்றிலிருந்து தீப்பந்தங்களோடு சிறுசிறு படகுகளில் பிரிந்து இறங்கி ஆட்கள் வியூகம் வகுத்தாற்போல் கடலில் தென்படுவதும் நல்லதற்கு என்று படவில்லை.

"முடிந்தவரை கபாடபுரத்து அரச சின்னங்களை மறைத்துவை. முத்துக்களை மரக்கலத்தின் கீழறையில் கொட்டி ஒளித்துவிடு. ஒரு பாவமும் அறியாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/142&oldid=490070" இலிருந்து மீள்விக்கப்பட்டது