பக்கம்:கபாடபுரம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

141


யாத்திரிகர்கள்போல் நடிக்க இனி நீயும் நானும் துணியவேண்டும். 'வலிய எயினனின் அன்பிற்குரிய விருந்தினர்களாக இருந்துவிட்டு வேறு தீவுகளுக்காகப் பயணத்தைத் தொடர்வதாக அவர்களிடம் கூறுவோம். வலிய எயினன் நாட்டில் இயற்கை யழகு மட்டுமே நம்மைக் கவர்ந்ததாகச் சொல்வது தவிரக் கப்பல்கட்டும் தளத்தைப் பார்த்த நினைவே நமக்கு அடியோடு மறந்துவிட்டதுபோல் நடிப்போம். தப்பி மேலே செல்ல இவற்றைத் தவிர வேறு வழி இல்லை. இவற்றைக் கொண்டே தப்பி மேலே சென்றுவிடலாம் என்பதற்கும் உறுதி இல்லை" என்றான் இளையபாண்டியன்.

"இது இப்படித்தான் நடக்கும் என்று எப்படிப் பொருத்தமாக உங்களால் அதுமானம் செய்யமுடிந்தது இளையபாண்டியரே?" - என்று முடிநாகன் வியந்தான்.

"ஏதோ மனத்தில் தோன்றியது. அதற்கு விளைவு இருக்குமென்றும் நம்பமுடிந்தது. நான் நினைத்தபடியே இப்போது நடக்கிறது. வழி மறித்துக்கொண்டு நிற்கும் கலங்களை மீறி நம் மரக்கலத்தைச் செலுத்த வேண்டாம். இங்கேயே அடங்கிப் பணிவதுபோல் நிறுத்த ஏற்பாடு செய். நமது மரக்கலம் நின்றவுடனே அவர்களே கோபாவேசமாக வருவார்கள். பணிவாகவே பேசுவோம். வலிய எயினனின் விருந்தோம்பும் பண்பைப் புகழ்வோம்" என்று நடக்கவேண்டியவற்றில் பரபரப்புக்காட்டத் தொடங்கினான் சாரகுமாரன். முடிநாகனுக்கு அந்த முன்னெச்சரிக்கை வியப்பை அளித்தது. இளையபாண்டியருடைய 'அரசதந்திர' மதிநுட்பம் பெருகிவருவதை உள்ளூரப் பாராட்டிப் பெருமைகொண்டான் அவன். அதற்குள் கடலில் நாலா திசைகளிலிருந்தும் படகுகள் அவர்கள் கலத்தை நெருங்கின. கொள்ளையிடுபவர் வழக்கமாகக் குரவையிடும் கோர ஒலிவிகற்பங்களும் காது செவிடுபடும் படி ஒலிக்கலாயின. அவர்களோ இயல்பை மீறிய நிதானத்தோடு அந்தக் கடற்கொள்ளைக்காரர்களை எதிர்கொண்டனர். தோன்றியபடி தோன்றிய இடத்தில் சட்டங்களையும் கயிறுகளையும் பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/143&oldid=490071" இலிருந்து மீள்விக்கப்பட்டது