பக்கம்:கபாடபுரம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

143


சந்தேகம் கொண்டவர்களுக்கே உரிய பேய்ப் பிடிவாதத்தோடு சாரகுமாரனிடம் உரையாடலைத் தொடங்கித் தொடர்ந்தார்கள் அவர்கள்.

"எயினர் தீவிலேயே உங்களை வியக்கச் செய்த இடம் கலஞ்செய் நீர்க்களமாகத்தான் இருக்கும். சிறிதும் ஒளிவு மறைவின்றி அதனை உங்களுக்குச் சுற்றிக் காண்பித்ததற்காகத்தான் வலிய எயினரை நீங்கள் மனமாரப் புகழுகிறீர்கள் பொதுவாக யாத்திரீகர்களுக்குத் தங்களுடைய பாதுகாப்புப் படைக் கோட்டங்களைச் சுற்றிக் காண்பிக்க யாரும் துணியமாட்டார்கள். வெள்ளை உள்ளமும், பரந்த நல்லெண்ணமும் உள்ள வலிய எயின மன்னரைப் போன்றவர்கள் சூதுவாது அறியாதவர்களாகையினால் யாருக்கும் எதையும் மறைப்பதில்லை" என்று கூறிவிட்டு உடனே சாரகுமாரனின் முகத்திலும் கண்களிலும் பிரதிபலிக்கும் உணர்ச்சிகளைத் தேடுபவன்போலக் கூர்ந்து நோக்கினான் வந்தவர்களில் ஒருவன்.

"தீவு தீவாகச் சுற்றித் திரியும் எங்களை ஒத்தவர்களுக்கு எந்தப் புதிய பொருளைப் பார்த்தாலும் வியப்புத்தான் ஐயா! ஆனால் அந்த வியப்பும், விந்தையும், அடுத்த புதிய பொருளைப் பார்க்கிறவரைதான் எங்கள் மனத்திலே நிலைத்திருக்கும். ஒவ்வொரு மலராகத் தேடிப்பறந்து திரிந்து தேனுண்ணும் வண்டுகளைப்போல் அனுபவங்களிலே மகிழ்ச்சிகொள்ள அலைபவர்கள் நாங்கள் சொல்லப்போனால் எயினர் தீவிலே நாத கம்பீரம் என்ற அழகிய அருவியும் ஆறும் எங்களைக் கவர்ந்த அளவுகூட கலஞ்செய் நீர்க்களமும், கப்பல் கட்டும் தொழில் துணுக்கங்களும், எங்களைக் கவரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்"

என முகத்தில் எந்தவிதமான உணர்வுகளுமில்லாத ஒரு பாமரனைப்போல் இளைய பாண்டியன் மறுமொழி கூறினான். அவ்வளவில் கப்பலை வழிமறித்தவர்களுக்குச் சந்தேகம் படிப்படியாகக் குறைந்திருக்கவேண்டும். சிறிது நேரம் வேறு ஏதேதோ கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/145&oldid=490073" இலிருந்து மீள்விக்கப்பட்டது