பக்கம்:கபாடபுரம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
23. கொடுந்தீவுக் கொலை மறவர்

அப்போது தாங்கள் கரையிறங்கப் போகும் தீவு கொடுந்தீவு என்பதையும், அங்கு வாழும் உலகத் தொடர்பில்லாத விநோதமான இனத்தைச் சேர்ந்த கொலை மறவர்கள், தங்களுடைய வழிபடு தெய்வமாகக் கருதும் ஒரு பாறைக்கு நரபலியிடும் வழக்கமுடையவர்கள் என்பதும் இளையபாண்டியன் அறியாதவை அல்ல. கரையோரமாக ஒதுங்கியிருந்த மனிதர்களின் கோரமான கபாலங்களும், குரூரமாகச் சிதறிக்கிடந்த எலும்புகளும் இறங்கியவுடனேயே அச்சம் நிறைந்த வரவேற்பை அளித்தன. பேய்த்தீவு என்றும், பூதத்தீவு என்றும் அந்தத் தீவுக்கு வேறு பெயர்கள் வழங்கிவந்தன. நாகரிகமடைந்த ஏனைய நாடுகளிலும், தீவுகளிலும் வாழ்வோர் அந்தத் தீவுக்கு அளித்த மாற்றுப் பெயர்கள் அவை. பொதுவாக வேறு பகுதிகளிலிருந்து அந்த வழியாகப் பயணம் செய்வோர் கடல் அமைதியாயிருக்கும் பகல் வேளைகளிலேயே கடந்து மேலே சென்றுவிடுவது தான் வழக்கம்.

"இங்கே இறங்கவோ தீவுக்குள் பிரவேசிக்கவோ வேண்டாம். விடியும்வரை இப்படியே கரையோரமாகத் தங்கியிருந்துவிட்டு விடிந்ததும் இரகசியாக மேலே பயணத்தைத் தொடர்ந்துவிடலாம்" என்றான் முடிநாகன். ஆனால் இளையபாண்டியன் அதற்கு இணங்கவில்லை. கரையோரமாக ஒதுங்கிய கப்பலைக் காற்று மாற்றத்திற்கும், அலைகளின் உயர்வு தாழ்வுக்கும் ஏற்பக் கவனித்துக்கொள்ளும் பொருட்டு ஊழியர்களை மட்டும் கப்பலிலேயே விட்டுவிட்டுத் தானும், முடிநாகனும், தீவுக்குள் போகலாம் என்றே இளையபாண்டியன் முடிவு செய்திருந்தான்.

"தீவுக்குள் போகலாமா?" என்று இளையபாண்டியன் வினாவியபோது கப்பல் ஊழியர்களுக்குக் கட்டளைகள் இட்டுக்கொண்டிருந்த முடிநாகன், திகைப்போடும் பயத்தோடும் பேச்சை நிறுத்திவிட்டு இளையபாண்டியனின் முகத்தை ஏறிட்டு நோக்கினான். அந்தப் பார்வையில் பீதியும் உயிர்ப் பயமும் தெரிந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/150&oldid=490078" இலிருந்து மீள்விக்கப்பட்டது