பக்கம்:கபாடபுரம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

151

கையால் சைகை செய்துவிட்டுத் தானும் அமர்ந்தான். அருகில் அமர்ந்து சுத்தமான காற்றைக்கூடச் சுவாசிக்க முடியாமல் அந்தக் கொடிக்கள்ளியைச் சுற்றிப் பொறுக்க இயலாத துர்நாற்றம் வீசியது. அவர்கள் அடக்கி முடக்கி மறைவாக உட்கார முயன்றபோது அந்தக் கொடிக் கள்ளியின் பசிய காம்புகள் முறிந்து பலபலவென்று பாலும் கொட்டி நனைந்தது. அந்தப் பால்பட்ட இடத்தில் தோல் தீய்ந்து புண்படரும். ஆகையால் இருவரும் தங்களால் இயன்றவரை அந்தக் கள்ளிப்பால் மேலே சொட்டாமல் தப்ப முயன்றார்கள். அவர்கள் முயற்சியினை மீறியும் சில இடங்களில் பால்பட்டு வேதனையளித்தது.

"செடிகள், கொடிகள், தரை எல்லாமே இங்கிருக்கிற மனிதர்களைப்போலவே வருகிறவர்களைத் துன்புறுத்தும் ஆற்றலில் சிறிதுகூடக் குறையாமல் இருக்கின்றன’ என்று இளைய பாண்டியனின் காதருகே முணுமுணுத்தான் முடிநாகன்.

"இவையெல்லாம் நம்மால் நிச்சயமாக மாற்றவோ, வேறாக்கவோ, திருத்தவோ முடியாது முடிநாகா ஆனால் மனிதர்களை மாற்றவும், வேறாக்கவும், திருத்தவும் முடியும் என்ற நம்பிக்கையை மட்டும் நீ ஒரு போதும் இழந்துவிடக் கூடாது காரணம், நமக்குள் துடித்துக் கொண்டிருப்பது போல் அவர்களுக்குள்ளும் ஓர் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான்" என்று இளையபாண்டியன் மெல்லிய குரலில் தன்னம்பிக்கையோடு மறுமொழி கூறியபோதும் முடிநாகனுக்கு அதில் அவ்வளவாக நம்பிக்கை பிறக்க வில்லை.

அவர்கள் இருவரும் இப்படிப் பேசிக்கொண்டிருந்த போதே திடீரென்று அந்த வெறிக்குரலும் மனிதர்கள் திமுதிமுவென்று ஓடிவருகிற காலடி ஒசையும் தங்கள் புறமாகத் திரும்பினாற்போல் தோன்றவே அவர்கள் திடுக்கிட்டு நிமிர்ந்தனர். ஆம் அவர்கள் இருவரும் அந்தப் புதரடியில் அமர்ந்திருப்பதை யாரோ ஒருவன் முதலில் பார்க்க நேர்ந்து பின் அவன் உடனே மற்றவர்களுக்கும் செல்லியிருக்க வேண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/153&oldid=490081" இலிருந்து மீள்விக்கப்பட்டது