பக்கம்:கபாடபுரம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

157


ஏனென்றால் மந்திரம்தான் இத்தகைய சாதனைகளைச் சாதிக்கமுடியும். ஆயுதங்களைக் கொண்டே மனிதர்களை வெல்லமுடியும் என்ற நேற்றுவரை நம்பிவந்தவன் நான். கலைகளின் உயர்ந்த பக்குவத்திலும் மனிதர்களை வெல்லமுடியுமென்பதை நேற்று நள்ளிரவு நிரூபித்துவிட்டீர்கள் நீங்கள்" என்றான் முடிநாகன்.

இளையபாண்டியனோ இந்தப் புகழ்ச்சிக்கு மறுமொழி ஏதும் கூறாமல் புன்முறுவல் பூத்தபடி இருந்தான். கப்பல் விரைந்து சென்றுகொண்டிருந்தது. அந்தப் பகுதியை விரைந்து கடந்து மேலே சென்றுவிடவேண்டும் என்று அவர்கள் ஊழியர்களுக்குக் கட்டளை இட்டிருந்தார்கள். தப்பிவிட்டாலும் எங்கே எந்தத் தீமை காத்திருக்குமோ என்ற முன்னெச்சரிக்கையும் பயமும் இன்னும் அவர்களை விட்டபாடில்லை. ஐந்தாறு நாழிகைப் பயணத்திற்குப்பின் மறுபடி அவர்கள் ஒரு சிறிய தீவை அடைந்தார்கள். இறங்கிச் சுற்றிப் பார்த்ததில் அந்தத் தீவில் மனிதர்களே இல்லையென்று தெரிந்தது. "பன்னீராயிரக்கணக்கான பழந்தீவுகள் இந்தத் தென்கடலிலும், மேற்குப் பகுதியிலும் சிதறிக் கிடக்கின்றன. இவற்றை முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் என்று தங்கள் பாட்டனார் அடிக்கடி கூறுவார். இவை எல்லாவற்றிலுமே வளமோ வழக்காறுகளோ, வாழ்க்கையோ ஒரே விதமாக இருப்பதில்லை. இந்தத் தீவைப்போல் சிலவற்றில் வாழ்க்கையே இல்லை. ஆயினும் இவற்றைச் சுற்றிப் பார்ப்பதால் நமக்குக் கிடைக்கும் அனுபவங்களையே தங்கள் பாட்டனார் பெரிதாக மதிக்கிறாரென்று தெரிகிறது" என்றான் முடிநாகன்.

அன்று மாலை இருள் சூழுகிறவரைமேலும் பல தீவுகள் ஆளரவமற்ற மயானம்போல் குறுக்கிட்டுக் கழிந்தன. இருட்டுகிற வேளைக்குக் 'கற்பூரத்தீவு' எனப்படும் பசுமையான தீவுக்கு வந்துசேர்ந்தனர் அவர்கள். அந்தத் தீவின் இன்னொரு விநோதம். தீவின் ஆண்மக்களே அதிகம் இல்லை; அவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/159&oldid=490087" இலிருந்து மீள்விக்கப்பட்டது