பக்கம்:கபாடபுரம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

கபாடபுரம்


முடிந்தது. மணிகள் ஒலிக்கத் தோட்ட முகப்பில் வந்து நின்ற தேரை முதலில் வரவேற்றவனே இளையபாண்டியன்சாரகுமாரன் தான். ஆசிரியர் பாடஞ் சொல்லுமுன் மூல நூலை மனனஞ் செய்துவிட வேண்டு மென்கிற முறைப்படி 'அகத்தியப் பேரிலக்கணத்தின் - எழுத்ததிகார நூற்பாக்களை மெல்ல வாய்விட்டுச் சொல்லித் தனக்குத் தானே கேட்கும் ஆத்மார்த்த சுகம் நாடும் இனிய குரலில் மனனம் செய்து கொண்டிருந்த சாரகுமாரன் பாட்டனாரின் முத்துப் பதித்த அலங்காரத்தேர் மணிகள் ஒலிக்க வந்து நின்றதைக் கண்டதும் மகிழ்ச்சி பிடிபடாத மனத்துடன் தேரருகே எழுந்து ஓடினான். தேர்ப்பாகன் முடிநாகன் தேரை நிறுத்தித் தேர்த்தட்டிலிருந்து கீழிறங்கித் தானிருக்குமிடம் வரும் வரையிற்கூடச் சாரகுமாரனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

"முடி நாகா! தாத்தா நலமாயிருக்கிறாரா? நகர் மங்கல விழாவில் ஒடியாடித் திரியும் பழைய உற்சாகம் தாத்தாவுக்கு இப்போது இருக்கிறதா? என்னைப் பற்றி அவர் ஞாபகம் வைத்திருந்து அடிக்கடி பேசுகிறாரா?"

"ஆகா கேட்க வேண்டுமா? தங்கள் தாத்தாவுக்கு இப்போதெல்லாம் அவருடைய தேர்க் கோட்டத்தைச் சேர்ந்த மூவாயிரம் முத்துத் தேர்களைப் பற்றிக் கூட மறந்துபோய் விட்டது. எக்காலமும் உங்கள் ஞாபகம் தான் நாள் தவறாமல் இளையபாண்டியருக்குப் பேர் வைத்த பெருமையை யாரிடமாவது சொல்லிக் கொண்டிருக்கிறார். 'முடி நாகா! அநாகுலன் மட்டும் என் பிள்ளையில்லை! இந்த மூவாயிரம் முத்துத் தேர்களும் என் செல்வப் பிள்ளைகள்தான். இவைகளில் ஏதாவதொன்று சட்டம் முறித்தாலோ சகடம் உடைந்தாலோ என் குழந்தையின் கையொடிந்தாற் போல நான் உணர்ந்து மனம் நோவேன் என்பதை மறந்து விடாதே' என்று தம்முடைய தேர்ச் செல்வங்களைப் பற்றி ஒரு காலத்தில் என்னிடம் மனம் உருகியிருக்கிற உங்கள் தாத்தாவுக்கு இப்போது ஒரே ஞாபகம் நீங்கள் ஒருவர்தான் இளையபாண்டியரே!” - என்றான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/16&oldid=489915" இலிருந்து மீள்விக்கப்பட்டது