பக்கம்:கபாடபுரம்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

161

துறையிலிருந்த வீரர்கள் ஒடோடிச்சென்று இளையபாண்டியனும், முடிநாகனும் அரண்மனைக்குச் செல்வதற்காக இரண்டு குதிரைகளை ஆயத்தம் செய்துகொண்டு வந்து நிறுத்தினர். அரண்மனை வாயிலில் தாய் திலோத்தமை இளைய பாண்டியனுக்கு ஆரத்தி சுற்றித் திலகமிட்டு வரவேற்றாள். முதியபாண்டியர்.ஆர்வத்தோடு அவனைத் தழுவிக் கொண்டு சில விநாடிகள் தன் பிடியிலிருந்து விடவே இல்லை. தந்தை அநாகுலனுக்கோ, தாய் திலோத்தமைக்கோ, மகனிடம் அளவளாவிப் பேச நேரமே அளிக்காமல் முதியபாண்டியரே அவனைத் தம்மோடு அழைத்துக்கொண்டு போய்விட்டார். முடிநாகனும் உடன் சென்றிருந்தான். முதியபாண்டியருடைய மந்திரக்கிருகத்தில் சிகண்டியாசிரியரும், அவிநயனாரும்கூட இருந்தனர். சிகண்டியாசிரியரைப் பார்த்தவுடனே அந்தக் கொடுந்தீவு அனுபவத்தைக் கூறுவதற்கு நா. முந்தியது! ஆனால் பாட்டனாரும் உடனிருப்பதை எண்ணி அந்த உணர்வை அடக்கிக்கொண்டான் இளைய பாண்டியன். முதியபாண்டியருடைய வினாக்களுக்கும், குறுக்கு வினாக்களுக்கும் தடுமாறாமல் மறுமொழிகூறி அவருடைய மனத்திருப்தியைச் சம்பாதிப்பது மிகவும் சிரமமான காரியமாயிருந்தது. நல்ல வேளையாக முடிநாகனும் உடனிருந்தது ஓரளவுக்கு உதவியாக இருந்தது.

"எந்தத் தீவிலாவது குறிப்பாகத் தென்பாண்டி நாட்டின் மேலும், கபாடபுரத்தின் மேலும் முறுகிய பகை இருக்கிறதா?"

"பகை என்பதையே வேறு விதமாகவும் சொல்லலாம். நட்பும், விருப்பமும் இல்லை என்பதே பகையின் அடையாளம் தான். அந்தத் தீவிலுள்ளவர்கள் அவரவர்கள் தலைவனையே தங்கள் கடவுளாக வீர வணக்கம் புரிகிறார்கள். ஆடகத் தீவில் எங்களைத் துறையிறங்கவே விடர்மல் மறுத்துவிட்டார்கள். எயினர் தீவில் கலங்கட்டும் தளத்தைக் காண்பித்து முடித்தபின் எங்கள் மேல் கடும் சந்தேகமுற்றுப் பல சோதனைகள் வைத்தார்கள். அவர்களை மீறித் தப்பி மேலே செல்ல நாங்கள் அரும்பாடுபட வேண்டியிருந்தது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/163&oldid=490091" இலிருந்து மீள்விக்கப்பட்டது