பக்கம்:கபாடபுரம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

163


உள்ளுணர்வு அவனுள் விகசித்து மலர்ந்தது. அந்த உணர்வு ஆத்மபூர்வமானதாகவும் இருந்தது.


26. சிகண்டியாசிரியர் மனக் கிளர்ச்சி

சிகண்டியாசிரியரிடம் இசையைப் பற்றிய பேச்சுக்களைப் பேசிக்கொண்டிருந்தபோதே சாரகுமாரனுக்குக் கண்ணுக் கினியாளின் ஞாபகம் வந்தது. பழந்தீவுப் பயணத்தை எதிர்பாராதவிதமாக மேற்கொள்ள நேர்ந்திருந்ததனால் அவளை நீண்ட நாட்களாகச் சந்திக்க முடியாமற்போய்விட்டது. நகர்மங்கல விழாவுக்காகக் கபாடபுரம் வந்த அந்த இசைக்குடும்பம் இவ்வளவு நாட்கள் அங்கே தங்கியிருக்கிறதோ, அல்லது வேறு ஊர்களுக்குப் பெயர்ந்து போய்விட்டதோ என்று அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. விழாவுக்காக வந்திருந்த பாணர்களும், விறலியர்களும், கூத்தர்களும் தங்கியிருந்த கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சென்று அவர்கள் இருக்கிறார்களா, புறப்பட்டுவிட்டார்களா என்ற உண்மையைத் தெரிந்துகொள்ள விரும்பினான் அவன். என்ன காரணத்தினாலோ சாரகுமாரனுடைய மனத்தில் இசையின் துணுக்கங்களைப் பற்றி நினைவு வரும்போதெல்லாம் இன்றியமையாதவளாக அவளும் நினைவு வந்தாள்.

அக்கம்பக்கத்துத் தீவுகளையும் நாடுகளையும் வென்று பாண்டியப் பேரரசை வலிமையாக்கும் போர்வீரனாக அவனை எதிர்பார்த்தார் பாட்டனார் வெண்தேர்ச்செழியர். அவன் இதயமோ அவனை உலகறியாமல் உள்ளுறக் கலை வீரனாக இசைவீரனாக வளர்த்துக் கொண்டிருந்தது. இணையற்ற அழகியும், நளின கலைகளில் பெருவிருப்பமுடையவளும், குரலினிமைமிக்கவளுமாகிய தன் தாய் திலோத்தமையைக் கொண்டு வளர்ந்துவிட்டான் அவன். தந்தை அநாகுலனின் போர்வலிமையோ பாட்டனார் வெண்தேர்ச்செழியரின் அரசதந்திரச் சூழ்ச்சிகளோ அவன் இதயத்தோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/165&oldid=490094" இலிருந்து மீள்விக்கப்பட்டது