பக்கம்:கபாடபுரம்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

கபாடபுரம்


அவளுடைய குரல் செவிகளையும் காற்று வெளியையும்விட்டு அகலாமல் அப்படியே நித்திய சங்கீதமாக நிலைத்துவிட்டதுபோல் ஓர் இனிய பிரமையை நிலவச் செய்திருந்தது. சிலருடைய இசைக்காக இலக்கணங்கள் படைக்கப்பட்டுள்ளன. வேறு சிலருடைய இசையோ இலக்கணங்களையே புதிது புதிதாகப் படைக்கிறது' என்று அவளுடைய இசையைக் கேட்டு நினைத்தான் சாரகுமாரன்.

அவ்வளவில் தலைநிமிர்ந்த அவள் அவன் அங்கு வந்து நிற்பதைப் பார்த்துவிட்டாள். உடனே எழுந்து சீற்றத்தோடு முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்ட அவளை எப்படி ஆற்றுவிப்பதென்று அவனுக்குத் தயக்கமாயிருந்தது.

"எப்போது பாடினாலும் நெய்தற் பண்ணையே பாடுகிறாயே அவ்வளவு பெரிய நிரந்தரமான சோகம் என்னவோ?" என்று பேச்சைத் தொடங்கினான் அவன்.

அவளிடமிருந்து மறுமொழி இல்லை. சில விநாடிகள் மெளனமாகவே நின்றாள் அவள். மறுபடியும் அவனே பேசினான்:

"சிலருடைய குரலுக்குச் σστασιο அழகாக இருக்கிறது..."

"சிலருடைய செயல்கள் சோகத்தையே பிறர்க்குத் தருவதால்தானோ என்னவோ?" என வெடுக்கென்று மறுமொழி கூறினாள் அவள்.

"நீ சீற்றமடைந்து பயனில்லை கண்ணுக்கினியாள்! எதிர்பாராதவிதமாக என் பாட்டனார் என்னைப் பழந்தீவுகளுக்குப் பயணம் அனுப்பிவிட்டார். உன்னிடம் சொல்லி விடைபெறவும் முடியவில்லை. எங்கே நீயும் என் குடும்பத்தினரும் கபாடபுரத்தை விட்டே ஊர்பெயர்ந்து போயிருப்பீர்களோ என்ற பயத்துடனேயே இப்போது இங்கு தேடி வந்தேன்..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/168&oldid=490098" இலிருந்து மீள்விக்கப்பட்டது