பக்கம்:கபாடபுரம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

15


தேர்ப்பாகன் முடிநாகன். தாத்தாவைப் பற்றிப் பிரியமாக விசாரித்தபின்பே தாய்தந்தையரைப்பற்றி விசாரிக்க ஞாபகம் வந்தது சாரகுமாரனுக்கு. அநுபவமும் முதுமையும் நிறைந்த பழைய தேர்ப்பாகனாகிய முடிநாகன் தாத்தா வெண்தேர்ச் செழியருக்கு மிகவும் வேண்டியவன். அந்த வேளையில் அவனுடைய ஆசிரியப் பெருமக்களாகிய சிகண்டியாரும், அவிநயனாரும், பொருநையாற்றிற்கு மாலை நீராடச் சென்றிருந்தனர். ஒவ்வாரு முறையும் இத்தகைய விழாக்காலங்களில் புலவர்களுக்குச் செய்யும் இராசகெளரவங்களைப் போல் இம் முறையும் புத்தாடைகள் - முத்துக்கள் - பழங்கள் ஆகிய பரிசுப் பொருள்களை அரண்மனையிலிருந்து கொண்டு வந்திருந்த தேர்ப்பாகன் முடிநாகன், "புலவர் பெருமக்களைக் காணவில்லையே? எங்கே போயிருக்கிறார்கள் இளையபாண்டியரே? வழக்கம்போல் அவர்களுக்கு இராச கெளரங்களைக் கொண்டு வந்திருக்கிறேன். அவற்றை அளிப்பதுடன் அவர்களையும் தங்களோடு கோநகரத்துக்கு அழைத்து வரச்சொல்லித் தாத்தா கட்டளையிட்டிருக்கிறார். மறுக்காமல் அவர்களும் உடன் நம்மோடு கோநகருக்குப் புறப்படும்படி செய்ய வேண்டியது இளையபாண்டியரின் பொறுப்பு" - என்று விநயமாக வேண்டினான்.

"அதற்கென்ன? என் ஆசிரியப் பெருமக்களும் கோநகருக்கு வந்து இந்த மங்கல நாளில் தாத்தாவைப் பார்த்து அளவளாவ மிகவும் ஆவலாயிருக்கிறார்கள். மறுக்காமல் அவசியம் வருவார்கள். அவர்களுடைய வரவைப்பற்றி உனக்குச் சிறிதும் கவலை வேண்டாம் முடி நாகா” என்று இளைய பாண்டியன் சார குமாரன் மறுமொழி கூறியபோது மீண்டும் மீண்டும் எதையாவது கேள்வி கேட்டு இளைய பாண்டியருடைய இனிய குரலைச் செவிமடுத்து மகிழ வேண்டும் போல ஆசையாயிருந்தது முடிநாகனுக்கு. இந்தக் குரலையும் இந்தப் புன்முறுவல் பொலியும் பொன் முகத்தையும் கண்டுகேட்டு மகிழ்வதற்காகத்தானே பெரிய பாண்டியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/17&oldid=489916" இலிருந்து மீள்விக்கப்பட்டது