பக்கம்:கபாடபுரம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

169


சாரகுமாரன்?" என்று அவர் கடுகடுப்போடு வினாவியபோது முடிநாகன் தயங்கித் தயங்கி மறுமொழி கூறினான். ஆயினும் பெரியபாண்டியர் சந்தேகத்தோடுதான் திரும்பினார்.

"சிகண்டியாசிரியர் திரும்பியதும் அவரை நான் காணவேண்டும் என்று சொல்" எனக் கூறிவிட்டுத்தான் திரும்பினார் அவர் என்ன நேருமோ என்ற பயத்தில் முடிநாகனுக்கு நெஞ்சு படபடத்தது. இளையபாண்டியரையே கூப்பிட்டு விசாரணை செய்தாலும் ஏதாவது கூறித் தப்பித்துக் கொள்வார். சிகண்டியாசிரியரைக் கூப்பிட்டு விசாரித்தால் அவர் பெரியபாண்டியரிடம் பொய் சொல்லமாட்டார். அவர் பொய் சொல்லாவிட்டால் இளையபாண்டியரின்மேல் பாட்டனாருக்குத் தாங்கமுடியாத சினம் மூளுமே என்று எண்ணி அஞ்சினான் முடிநாகன். இளையபாண்டியர் அதைப் பெரியவரிடம் தான் சொன்னதற்காகத் தன்மேற் சினந்துகொள்வாரோ என்ற பயம்கூட முடிநாகனுக்கு இருந்தது. தேரில் கடற்கரைக்குச் சென்றிருந்த சிகண்டியாரும், சாரகுமாரனும் திரும்பி வருகிறவரையில் அரசகிருகத்தின் தேர்கள் நிறுத்தப்படுகிற இடத்திலேயே அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தான் முடிநாகன்.

நன்றாக விடிந்து சில நாழிகைகள் கழிந்தபின்பே அவர்கள் சென்றிருந்த தேர் திரும்பி வந்தது. உடனே முடிநாகன் இளையபாண்டியனை மட்டும் ஒரு கணம் தனியே அழைத்துப் பெரியவர் தேர்களைப் பார்க்க வந்திருந்ததையும், நடந்த பிற விவரங்களையும் கூறினான். இளையபாண்டியனால் முடிநாகனிடம் கோபித்துக் கொள்ளமுடியவில்லை. சிகண்டியாசிரியரிடம் பெரியவர் வினாவினால் அவருக்குச் சந்தேகம் வராதபடி மறுமொழி கூறுமாறு சொல்லிவிட முடிவுசெய்தான் அவன். தேரை அரசகிருகத்தின் தேர்ச்சாலையில் விட்டு விட்டு இருவரும் அரண்மனைக்குள்ளே செல்ல இருந்த நிலையில் முடிநாகன் "பெரியபாண்டியர் தங்களைக் கண்டு பேச விரும்பினார்" என்று சிகண்டியாசிரியரிடம் தெரிவித்தான். சிகண்டியாசிரியரும் அதைக் கேட்டுத் தாமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/171&oldid=490101" இலிருந்து மீள்விக்கப்பட்டது