பக்கம்:கபாடபுரம்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

175


உடன் வந்திருந்த சிகண்டியாசிரியருக்கே வெறுப்பைத் தருவதாயிருந்தது அவர் பேச்சு. தானும், தன்னுடன் வந்தவரும் இன்னார் இன்னாரெனச் சிகண்டியாசிரியர் தெரிவிக்காததனால் புள்ளிமான்போன்ற அந்தப் பெண்ணுக்குப் பெரியபாண்டியரிடம் பயமும் இல்லை. மதிப்பும் வரவில்லை. சினமே மேலெழுந்து பொங்கியது. காலையில் இளைய பாண்டியன் சிகண்டியாசிரியரை மாறுவேடத்தில் அழைத்து வந்திருந்ததனால் இப்போது அவரை அவளுக்கு அடையாளமும் தெரியவில்லை. ஆனால் உடன் வந்திருந்த கிழச்சிங்கத்தை ஒத்த அந்த முதியவர் வினாவினாற் போன்ற வினாக்களையே தன்னிடம் வினவாமல் அமைதியாக இருந்ததோடல்லாமல் அந்த வினாக்களை ஒரளவு வெறுப்பதுபோன்ற முகபாவத்தையும் காண்பித்ததனால் சிகண்டியார் மேல் அவளுக்குக் கோபம் வரவில்லை. பெரியபாண்டியர் மேலேயே சினம் மூண்டது. பெரியபாண்டியரோ தாம் யாரென்று அவளுக்குக் குறிப்பாகப் புரிய வைத்து அவளை மேலும் பயமுறுத்தவும், திகைக்க வைக்கவும் விரும்பினார்.

அரசகுடும்பத்தினர் மட்டுமே பாணர்களுக்குப் பரிசளிக்கும் பொற்பூக்கள் சிலவற்றைத் தம்மோடு கொண்டுவந்திருந்த அவர் அந்த பொற்பூக்களில் ஒன்றை எடுத்து, "எவ்வாறாயினும் ஆகுக! உன் கலைத்திறனைப் போற்றி இவற்றை உனக்களிக்கிறேன்" என்று அவற்றை அவளிட்ம் நீட்டினார். ஆனால் அவள் அவற்றைப் பெற்றுக்கொள்ளவில்லை. அவரை எள்ளி இகழ்வதுபோன்ற புன்னகை யொன்று உடன் அவள் இதழ்களில் மின்னி மறைந்தது. "தங்களை மதியாதவர்களுடைய பரிசை ஏற்பது கலைஞர்களின் இயல்பில்லை என்பதைத் தாங்கள் அறிவீர்கள் அல்லவா?” என்று அவள் பதிலுக்குச் சீறியபோது பெரியவரின் முகத்தின் சினம் அதிகமாகியது. கடுமையும் மிகுதியாகி வளர்ந்தது.

"ஏதேது? உங்கள் சினத்தைப் பார்த்தால் எங்களை நாடுகடத்தவும் செய்வீர்கள் போலிருக்கிறதே?" என்றாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/177&oldid=490108" இலிருந்து மீள்விக்கப்பட்டது