பக்கம்:கபாடபுரம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

கபாடபுரம்


உருகி உருகி உயிர் விடுகிறார்? என்றெண்ணி உள்ளுர வியந்துகொண்டிருந்தான் அவன். இப்போது பட்டத்திலிருக்கும் - இளைய பாண்டியர் சாரகுமாரரின் தந்தையாரான அநாகுல பாண்டியரிடமுள்ள தொடர்பை விட, முதிய பாண்டியரிடம்தான் முடிநாகனுக்கு அதிகத் தொடர்பு இருந்தது. முதியவராகிய பெரிய பாண்டியரின் ஆட்சிக் காலத்து இறுதியில்தான் - தேர்க்கோட்டத்தையும் - அதன் உடைமையான மூவாயிரம் முத்துத் தேர்களையும் -- மேற்கொண்டு கண்காணித்துக்கொள்வதற்காக அவன் நாக நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டிருந்தான். இதனால் பெரிய பாண்டியரிடம் அவனுக்கு அளவற்ற விசுவாசமும் நன்றியும் அந்தரங்கமான பக்தியுமே ஏற்பட்டிருந்தன. பெரியவரின் அன்புக்கும், பிரியத்துக்கும் பாத்திரமான பேரப்பிள்ளை என்பதனால் அதே விசுவாசமும் அன்பும் இளைய பாண்டியர் சாரகுமாரனிடமும் முடிநாகனுக்கு உண்டு. தேனிற் செய்தது போன்று சன்னமாக இழையும் இனிய குரலில் வார்த்தைகளைத் தொடுத்துத் தொடுத்து அழகாகச் சாரகுமாரன் உரையாடுவதைக் கேட்டு அந்தக் குரலிலேயே மெய்ம் மறந்து போகிறவன் முடிநாகன்.

"எதிர்காலத்தில் இந்தக் குரல் பாண்டிய நாட்டின் பல்லாயிரம் பல்லாயிரம் மக்கள் கூட்டத்தை யெல்லாம் வசியப்படுத்தி மயக்கப்போகிறது" என்று தனக்குள் பலமுறை நினைத்து நினைத்துக் கற்பனை கூடச் செய்திருக்கிறான் முடிநாகன். யெளவனப் பருவத்துக் கந்தருவ இளைஞனைப் போல் கண்களும், தோற்றமும் எப்போதும் சிரித்துக் கொண்டேயிருக்கின்றனவோ என்றெண்ணும்படி பொலிவான முகத்தோடு - பொன் வடிந்து வார்ந்ததை யொத்த தோள்களுமாக விளங்கும் சாரகுமாரபாண்டியரை இன்றெல்லாம் கொலுவிருக்கச்செய்து பார்த்துக்கொண்டே யிருக்கலாம் போலத் தோன்றும். பெரிய பாண்டியர். வெண்தேர்ச் செழியர் மட்டுமன்றிச் சாதாரணமான அரண்மனை மெய்க் காவல் வீரர் முதல் தேர்க்கோட்டத்து மேற்பார்வைக்காரனான முடிநாகன் வரை எவர் இளைய பாண்டியர்சார குமாரனை எதிரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/18&oldid=489917" இலிருந்து மீள்விக்கப்பட்டது