பக்கம்:கபாடபுரம்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

181


"ஆம்! அந்த இசையிலக்கண நூலைக் கபாடபுரத்துப் புலவர் பெருமக்கள் கூடிய பேரவையிலேயே அரங்கேற்றுவது பற்றிப் பேசத்தான் நான் இப்போது உங்களிடம் வந்தேன். விரைவில் அதை அரங்கேற்றி முடித்துவிட்டால் அப்புறம் இளையபாண்டியருடைய கவனத்தை அரசியற் காரியங்களில் திருப்புவதற்கு மிகவும் வாய்ப்பாக இருக்கும். அதை அரங்கேற்றக் காலந் தாழ்த்திக்கொண்டே போனாலும் இளையபாண்டியருடைய கவனம் அந்த அரங்கேற்றத்தை எதிர் நோக்கியே கவலைப்பட்டுக்கொண்டிருக்கும். அதைத் தவிர்க்க ஒரே வழி அந்த அரங்கேற்றத்தை உடன் ஏற்பாடு செய்து முடிப்பதுதான்! தங்கள் மனக்குறிப்பை அறிந்துதான் நானும் அதனை விரைந்து அரங்கேற்றி முடிக்க விரும்பினேன்." சமயோசிதமாக அவர் மனப்போக்கினை அறிந்து இப்படிப் பேச்சைத் திசை திருப்பினார் புலவர்.

"அரங்கேற்றம் முடிந்தபின்பும் சாரகுமாரன் கலை கலை என்று திரியத் தொடங்கினால் எனக்கு உங்கள்மேல்தான் கோபம் வரும்" என்று நிபந்தனையில் இறங்கினார் பெரியவர். ஒரு வழியாக அதற்கு ஏதோ தீர்திறன் கூறி அவரை அரங்கேற்றத்துக்கு இணங்கச்செய்து அடுத்த பெளர்ணமி மாலையில் இசைநுணுக்க நூலுக்கு அரங்கேற நாள் குறித்தார் சிகண்டியாசிரியர்.

"இந்த நூல் அரங்கேறிய உடனே மறுபடியும் இன்னொரு இசையிலக்கணத்தை உடனே உருவாக்கிவிடமாட்டீரே?” என்று பெரியபாண்டியர் குத்தலாகக் கேட்டபோது சிகண்டியாசிரியருக்கு உள்ளுறச் சிரிப்புத்தான் வந்தது. ஆனால் அந்தச் சிரிப்பை அடக்கிக்கொண்டு அடக்கமாகவும் நிதானமாகவும், "அப்படியெல்லாம் ஒன்றும் நேர்வதற்கில்லை" என்று பெரியவருக்கு மறுமொழி கூறினார் சிகண்டியாசிரியர்.


30. அரங்கேற்றம்

பல தடைகளை எழுப்பிச் சிகண்டியாசிரியருடைய பொறுமையைச் சோதித்தபின் இசையிலக்கணத்தைப் புலவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/183&oldid=490114" இலிருந்து மீள்விக்கப்பட்டது