பக்கம்:கபாடபுரம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

கபாடபுரம்


"இயல்புதானே? சொற்களைத்தான் விளங்கிக்கொள்ள முடியும். தொனிகளை உணரத்தான் முடியும்."

இதற்கு மறுமொழி ஒன்றும் கூறாமல் சிறிதுநேரம் அமைதியாயிருந்த இளையபாண்டியன்,

"நல்லது! இனி நான் வந்த காரியத்தைச் சொல்லிவிட்டுப் புறப்படவேண்டியதுதான். இசையிலக்கண அரங்கேற்ற விழாவுக்காக உன்னை அழைக்கவந்தேன். சிகண்டியாசிரியர் இலக்கண நூற்பாக்களை ஒவ்வொன்றாக அவையில் கூறி விளக்கியதும் அதற்கேற்றமுறையில் நானும் நீயும் இசைபாடி இலக்கணங்களுக்கு இலட்சியம் காட்ட வேண்டும்."

"நீங்கள் அரசகுமாரர். எதற்கும் எந்த இடத்திலும் இலட்சன இலட்சியங்கள் கூறமுடியும், நாங்கள் நாடோடிப் பாண்குடி மக்கள். எங்களுடைய பெருமையும், புகழ்களும் வரையறுக்கப்பட்ட எல்லையோடு நின்றுவிடக்கூடியவை. நாங்கள் சிலவற்றை அடையமுடிந்து பலவற்றை அடைய முடியாமல் தவிக்கும் ஏழைகள்" என்று அவள் கூறியபேது அழுகையும், விம்மலும் குரலை அடைத்தன.

"உன் மனத்தை யாரோ வலிய முயன்று கெடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில் நான் என்ன கூறினாலும் ஏற்றுக் கொள்ளமாட்டாய். அரங்கேற்ற விழாவுக்கு வா அங்கே சிகண்டியாசிரியர் உன்னைக் கூப்பிட்டுப் பாடவேண்டும் போது மறுக்காமல் யாழுடன் வந்து பாடு..." என்று வேண்டிக்கொண்டு அவளுடைய மறுமொழியை எதிர்பாராமலே புரவியேறிப் புறப்பட்டுவிட்டான் சாரகுமாரன்.

அவனுடைய புரவி அந்த இடத்தைவிட்டு மறைந்த மறுகணமே அவள் கோவென்று கதறியழத் தொடங்கினாள். அவளுள்ளே குமுறிக்கொண்டிருந்த உணர்ச்சிகள் வெடித்துக் கிளர்ந்தது போலாயின. கடலையும், மணற்பரப்பையும், புன்னை மரங்களையும், அவற்றொடு தன்னைச் சூழ்ந்துவிட்ட தனிமையையும் உணர்ந்தவள்போல் நேடுநேரம் குமுறிக் குமுறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/186&oldid=490117" இலிருந்து மீள்விக்கப்பட்டது