பக்கம்:கபாடபுரம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

கபாடபுரம்


வரிசையாகப் புலமைச் செருக்குடனே வீற்றிருந்தார்கள். கிழச்சிங்கம் போல் பெரியபாண்டியர் புலவர்களுக்கு நடுநாயகமாகச் சிகண்டியாசிரியருடன் அமர்ந்திருந்தபடியால் பட்டத்து முறைப்படி அநாகுலபாண்டியன் தனியே கொலுவீற்றிருந்ததுகூட அங்கு எடுப்பாகத் தெரியமுடியாது போயிற்று. பெரிய பாண்டியருக்கும் சிகண்டியாசிரியருக்கும் நடுவே அடக்க ஒடுக்கமாகப் பணிவுடன் இளையபாண்டியன் சாரகுமாரனும் அமர்ந்திருந்தான். அவனுடைய கண்கள் கூட்டத்தில் யாரையோ துழாவிக்கொண்டிருந்தன. அப்படி அவன் யாரையோ துழாவித் தேடுவதைப் பெரியபாண்டியரும் சிகண்டியாசிரியரும் அவனறியாமல் கவனித்துத் தங்களுக்குள் ஒருவர் முகத்தை மற்றொருவர் குறிப்பாகப் பார்த்துக்கொண்டார்கள்.

சிகண்டியார் ஒருவருக்கு மட்டும் அந்த நிலையில் இளைய பாண்டியன்மேல் மிகவும் அநுதாபமாக இருந்தது. உள்ளுற மனத்துக்குள்ளேயே அரசகுல தர்மங்களின் கடுமையான நெறி துறைகளை வெறுத்தார் அவர் பிரியமுள்ள இருவருக்கு நடுவே ஏற்றத்தாழ்வு - பெருமை - சிறுமை கற்பிக்கும் இராசகம்பீர வாழ்வின் கொடுமையினால் இளையபாண்டியன் சாரகுமாரன் தன் இருதயத்திலே வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத சோகம் ஒன்றைத் தாங்க நேரிடப் போவதை எண்ணி அவர் தவித்தார். பாவம்! இளையபாண்டியனுக்குப் பெரிய பாண்டியர் செய்திருக்கும் ஏற்பாடு தெரிந்திருக்க நியாயமில்லை. அரங்கேற்றத்திற்காகக் கூடியிருந்த அவையின் வியூகத்தில் கடைசி வரிசையாக எங்கோ ஒரு மூலையில் பாணர்கள் அமரவும், நிற்கவும் இடம் விடப்பட்டிருந்தது. விழாவில் கண்ணுக்கினியாளும் பாடுவதற்குப் பெரியபாண்டியரின் இசைவைச் சிகண்டியார் சாமர்த்தியமாகப் பெற்றிருப்பார் என்று இளையபாண்டியன் நினைத்திருந்தான். சிகண்டியார் நிலைமையோ இருதலைக் கொள்ளி எறும்பாக இருந்தது. பெரியபாண்டியருக்கு அஞ்சவேண்டிய நிலையில் இருந்த அவரே இளையபாண்டியனுக்கு அநுதாபப்படவேண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/188&oldid=490119" இலிருந்து மீள்விக்கப்பட்டது