பக்கம்:கபாடபுரம்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

191

உனக்கு எப்படி மனம் வந்தது பெண்ணே? - என்றெல்லாம் இடித்துரைக்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டான். ஆனால் அன்று மாலையோ இரவோ, அவன் எங்கும் போக முடியாமல் சிகண்டியாசிரியரும், பெரியபாண்டியரும் அவனுடனேயே இருந்துவிட்டனர். சிகண்டியாசிரியர் ஒன்றும் பேசவில்லை.

பெரியபாண்டியர் மட்டும், 'ஒர் அரசகுமாரன் மலை குலைந்தாலும் நிலைகுலையாத திடசித்தமுடையவனாக இருக்கிற மனப்பக்குவம் பெறவேண்டும். கலைகளோ, கலைத்திறனோ அவன் தொழிலல்ல கலைகளை அவன் இரசிக்கலாம். ஆனால் ஆண்மைதான் அவன் தேசத்தைக் காக்கும்' என்றெல்லாம் சம்பந்தா சம்பந்தமின்றி உபதேசம் செய்யத் தொடங்கினார். பொறுமையாக அவற்றை அவன் கேட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று.

அன்றிரவு சாரகு மாரனுக்கு உறக்கம் கொள்ளவில்லை. எப்போது விடியும் என்ற ஆவலிலே மஞ்சத்தில் புரண்டு கொண்டிருந்தான் அவன். விடிந்தது. பரபரப்பான மனநிலையோடு புரவியேறிக் கடற்கரைக்கு விரைந்தான் அவன். அங்கு சென்று அவன் கண்டதென்ன? கடற்கரைப் புன்னைத் தோட்டம் வெறுமையாயிருந்தது. அங்கு பாடியிறங்கியிருந்த பாணர்கள் எல்லாரும் புறப்பட்டுப் போயிருந்தார்கள். அருகே இருந்த மீனவர்கள் சிலரிடம் விசாரித்ததில் முதல் நாளிரவே அவர்கள் ஒழித்துக்கொண்டு புறப்பட்டுவிட்டதாகத் தெரிந்தது. அவன் தவித்தான். மனம் பதறினான். இலட்சணங்கள் பிறக்கும் அவசரத்தில் இலட்சியங்கள் அழிவதும் உண்டு' என்று அவள் கூறிய சொற்களையே மீண்டும் நினைத்தான். ஏதோ ஒரு பரபரப்பில் புரவியை விரைந்து செலுத்திக் கபாடங்களைக் கடந்து புறநகருக்கு வந்தான். 'அவளைப் பின் தொடர்ந்து பிடித்துவிடலாம்' - என்ற வெறியோடு பெரும் பாண்டிய ராஜ பாட்டையில் சிறிது தொலைவு சென்றபின், 'அது சாத்தியமில்லை' என்று அவநம்பிக்கையோடு மீண்டும் தளர்ந்து திரும்பினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/193&oldid=490124" இலிருந்து மீள்விக்கப்பட்டது