பக்கம்:கபாடபுரம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

கபாடபுரம்


எதிரே அவன் பாட்டனார்நிறுத்திய மாபெரும் புகழ்மிக்க செம்பொற் கபாடங்கள் வெயிலொளியில் மின்னுவது தெரிந்தது. எதிர்காலத்தில் பெயர் சொல்ல முடிந்த பல காரியங்களைச் சாதிக்க வல்ல சரித்திரத்தை உடைய அந்த இளம் ராஜ குமாரனின் இதயம் குருதிநீர் வடித்தது அந்த விநாடியில். மனித இதயத்தின் அந்தரங்கமான சங்கீதத்துக்கு எந்த நாளும் உலகில் வடிவம் தந்து பாடமுடியாதென்று உணர்ந்தவன்போல் விரக்தியோடு அந்த வானளாவிய கபாடங்களை மீண்டும் அவன் நிமிர்ந்து பார்த்தபோது அவனது அழகிய விழிகளிர் நீர் மல்கியது. இப்போது அவனுடைய மனமும் ஒரு கபாடம் ஆகிவிட்டது. மனத்துக்கினிய ஒருத்தியின் மிக இனிய நினைவுகளை உள்ளே வைத்துப் பூட்டிக் கொள்ளவேண்டிய நிலைமையினால் அவனுடைய தலைநகரைத் தவிர அவன் மனமும்கூட ஒரு கபாடபுரம் ஆகிவிட்டது.

'எதிர்கால வரலாறு தன்னையும் - தனக்காகப் பிறந்து இசையிலக்கண நூலையும் பற்றி அறிகிற அளவு உலகம் தன் காதலின் ஏமாற்றத்தை எங்கே அறியப் போகிறது?' என்றெண்ணியவாறே குதிரையை மெல்லச் செலுத்தியபடி மீண்டும் நகருக்குள் திரும்பினான் சாரகுமாரன். கோ நகரத்தின் மாபெரும் கபாடங்கள் திறக்கப்பட்ட அந்த இனிய வைகறை வேளையிலே அந்த அநுதாபத்துக்குரிய இளவரசனின் மனத்துக்குள்ளே இரண்டு கபாடங்கள் மூடிக்கொண்டன. அந்த மூடிய கபாடத்துக்குள்ளே ஒரு நளின சங்கீதம் இடையறாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும். அதற்கு மூப்பில்லை. சோர்வில்லை. ஒய்வில்லை. உலைவில்லை. ஏனென்றால் இந்த உலகில் எந்த நாளும் மனித இதயத்தின் அந்தரங்கமான சங்கீதத்துக்கு வடிவம் தந்து பாடமுடிவதில்லை.


(முற்றும்)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/194&oldid=490125" இலிருந்து மீள்விக்கப்பட்டது