பக்கம்:கபாடபுரம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

கபாடபுரம்


அதை நினைவூட்டி மறுபடியும் எடுத்தளிக்க உங்களைப் போன்றவர்கள் இருக்கும்போது கலைஞர்களுக்கென்ன கவலை."

"என்னிடம் நீ சொல்வது போல் ஏதாவது நல்ல குணம் இருக்குமானால் அதற்காகக் கடவுளை வாழ்த்து பெண்ணே ! என்னை வாழ்த்துவதும் வியப்பதுமே ஒரு நாள் நான் இவற்றை மறப்பதற்கோ இழந்து விடுவதற்கோ காரணமான அகங்காரத்தை என்னுள் உண்டாக்கி விடலாம்..."

"ஐயா! எளிமையாகத் தோன்றினாலும் தாங்கள் பெருஞ் செல்வக் குடியைச் சேர்ந்தவர் போல் தெரிகிறீர்கள். தயை செய்து தாங்கள் யாரென்பதை எங்களுக்குக் கூறலாமா?"

"என்னைப் பற்றிக் கூறுவதற்கு அப்படிப் பெரிதாக ஒன்று மில்லை பெண்ணே! இந்தப் பாண்டி நாட்டின் கோநகரமாகிய கபாடபுரத்தில் நிரம்பியிருக்கும் மிகப்பெரிய முத்துவணிகர்களில் ஒருவன் நான்..."

"இவ்வளவு பெருந்தன்மையும் கருணையும் காட்சிக்கு எளிமையும் நிரம்பிய தாங்கள் விற்கும் முத்துக்களெல்லாம் சிறப்பாயிருக்குமென்பதில் ஐயமேயில்லை - ஐயா!"

இதைக் கேட்டுச் சாரகுமாரன் புன்னகை பூத்த முகத்தோடு மெளனமாயிருந்தான். முடிநாகனால் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை. எனவே அவன் அந்தக் கூட்டத்திலிருந்து சிறிது தொலைவு விலகிச் சென்று நின்று கொண்டான். சாரகுமாரனோ கண்ணுக்கினியாள் பேசப் பேச அவளுடைய குரலினிமையையும் அதில் நிரம்பியிருக்கும் குதலைத் தன்மையையும் கேட்டு இரசிக்க விரும்பியவன் போல் நின்று கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் உடனிருந்த பாணர்கள் வழிநடையைத் தொடர முற்படவே மற்றவர்களோடு அவளும் அவனிடம் விடை பெற்றுக் கை கூப்பினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/32&oldid=489931" இலிருந்து மீள்விக்கப்பட்டது