பக்கம்:கபாடபுரம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

33


விட்டது. அருகே நடந்து சென்று கொண்டிருந்த வேறோர் பாணர் கூட்டத்தோடும் தானும் இறங்கிக் கொள்வதாக அவள் கூறவே தேரை நிறுத்தச் செய்து அவளை இறக்கிவிட்ட பின் தேரிலிருந்த அவளது யாழையும் ஞாபகமாக அவள் கையில் எடுத்துக் கொடுத்து "எந்த நிலையிலும் இதைக் கீழே தவற விட்டுவிடாதே பெண்னே கவிஞனின் எழுத்தாணியும், பாணனின் யாழும் வாழ்க்கையின் சோர்வுகளில் கூட அவனிடமிருந்து கீழே நழுவக்கூடாது" என்று சிரித்துக் கொண்டே கூறினான் சாரகுமாரன். அவள் நன்றியோடு கை கூப்பினாள்.

அவ்வளவில் கோட்டை வாயிலினருகே சுற்றிலும் இளையபாண்டியர் சாரகுமாரனுக்கு வாழ்த்துக் கூறும் குரலொலிகள் எழுந்தன. அந்த ஆரவாரத்தில் தடுமாறித் தவித்த கண்ணுக்கினியாள், "எங்கே? எங்கே?' - என்று பரபரப்புடன் அருகே நின்ற பாண்டிய நாட்டுக் காவற்படை வீரன் ஒருவனை அணுகி வினாவியபோது அவன் முன்னே சென்று கொண்டிருந்த தேரையும் அதில் புன்முறுவல் மலர நின்று கொண்டிருந்த இளையபாண்டியரையும் காண்பித்தான். "அவரா? அவர் கபாடபுரத்து முத்து வணிகரல்லவா?" என்று அவள் அப்போது வியந்த வியப்புக்குரல் மற்றவர்களின் கடலலை போன்ற வாழ்த்தொலியில் கலந்து கரைந்து விட்டது.


3. தேர்க்கோட்டம்

பேரப் பிள்ளையாண்டான் வரப் போகிறான் என்ற மகிழ்ச்சியினாலும் ஆவலினாலும் அந்த அகாலத்திலும் உறங்காதபடி விழித்திருந்தார் பெரிய பாண்டியர் வெண்தேர்ச்செழியர். தந்தையார் அநாகுல பாண்டியரையும், தாய் திலோத்தமையையும் பார்த்து வணங்கி நலம் கேட்டறிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/35&oldid=489934" இலிருந்து மீள்விக்கப்பட்டது