பக்கம்:கபாடபுரம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

கபாடபுரம்


புலவர்கள் சிலர் தன்னையும் சேர்த்துப் புகழ்ந்திருப்பதைக் கேட்டுக் கூசினான் சாரகுமாரன். அவனே கேட்டு வெட்கப்படும்படி அவனுடைய அழகையும், வசீகரத்தையும் குரலினிமையையும் வண்ண வனப்பையும் புலவர்கள் வருணித்துப் புகழ்ந்திருந்தார்கள்.

'பாண்டி நாட்டுப் பேதைப் பெண்கள் எல்லாம் இளைய பாண்டியர் உலா வரும்போது வளை சோர நின்று பந்தையும் கழங்கையும், அம்மானைக் காய்களையும், பிற விளையாட்டு ஆயங்களையும் அன்றே மறந்தனர்' - என்ற பொருள்படப் புனைந்து சிங்காரரசம் பொங்கி வழிய வழியப் பாடினார் ஒரு புலவர். முதிய பாண்டியர் வெண்தேர்ச் செழியர் முகம் சிவக்க மீசை துடி துடிக்கக் கடுமையாக உறுத்துப் பார்த்தாரோ இல்லையோ அந்தப் புலவர் பயந்துபோய் அடுத்த பாடலை வேறுவிதமாக மாற்றி, "பேதைப் பெண்களே! நீங்களெல்லாம் இப்படி உருகிப் பயனில்லை! ஏனெனில் இளைய பாண்டியருக்குப் போர்க் களங்களிலும், அறிவாராய்ச்சியிலும் நேரம் போவது தவிர உங்கள் புறம் திரும்பிப் பார்க்கவும் வேண்டாம்" - என்று பொருள்படும்படி வேறுவிதமாகப் பாடி முதிய பாண்டியரின் கோபத்தைத் தணித்தார்.

இன்னொரு புலவர் 'இளையபாண்டியரைக் காண முடியாமல் கடலருகே நீங்கள் நெஞ்சழிந்து இரங்கி உகுத்தக் கண்ணிர்த்துளிகள் எல்லாம் அல்லவா இப்படி இந்தக் கபாடத்தின் விலை மதிப்பற்ற முத்துக்களாக விளைந்தன' என்று பொருள் படும்படி பேதைப் பெண்களை விளித்துக் கற்பனை செய்வதுபோல் ஒரு வெண்பா இயற்றிப் பாடினார்.

"ஐயா புலவரே பேரப் பிள்ளையாண்டானுக்குக் கல்வியும் வீரமும், கலைகளும், பெருக வேண்டுமென்று ஏதாவது நன்றாக வாழ்த்துக் கூறிப் பாடுங்கள்; உமக்கு இந்த ஆகாத கற்பனைகள் எல்லாம் எதற்கு? முக்கால்வாசி அரச குடும்பத்துப் பிள்ளைகள் உங்களைப் போன்ற புலவர்களின் புகழ்மயக்கில்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/40&oldid=489939" இலிருந்து மீள்விக்கப்பட்டது