பக்கம்:கபாடபுரம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

45


'கவிஞனின் எழுத்தாணியும், பாணனின் யாழும் வாழ்க்கையின் சோர்வுகளில்கூட அவர்களிடமிருந்து கீழே நழுவி விடக்கூடாது' என்று நான் கூறியது இனிமேலாவது உனக்கு நினைவிருக்கும் அல்லவா?"

"அவர்களுடைய எழுத்தாணியும், யாழும் கீழே விழும் போதெல்லாம் - அதை நினைவூட்டி மறுபடியும் எடுத்தளிக்க உங்களைப்போன்ற முத்துவனிகர்கள் இருக்கும்போது கவலை எதற்கு?" - என்று குனிந்த தலை நிமிராமல் அவள் கூறிய பதில் வார்த்தைகளில் 'முத்து வணிகர்களிருக்கும் போது - என்ற இடத்தில் மட்டும் குரலை நிறுத்தி வார்த்தைகளை அழுத்தி 'நீங்கள் ஒரு முத்து வணிகர்' - என்பதாக என்னிடம் பொய் சொல்லியிருக்கிறீர்கள். ஞாபகமிருக்கட்டும் - என்பதுபோல் பேசினாள்.

"அதில் சந்தேகமென்ன? இந்தப் பாண்டி நாட்டுக் கபாடத்தின் புகழ்பெற்ற முத்துக்களுக்கெல்லாம் சொந்தக்காரர்கள் நாங்களே அல்லவா?" - என்று அவள் கேள்வியிலே குத்திக் காட்டப்பட்ட குறிப்புக்கும் சேர்த்தே மறுமொழி கூறினான் இளையபாண்டியன். அவளும் விடவில்லை. மேலும் அவனை வம்புக்கிழுத்தாள்.

"கபாடபுரத்து முத்து வணிகர்கள் முத்துக்களோடு பொய்யையும் விலைபேசுவார்கள் போலிருக்கிறதே?"

"வாணிகத்துக்குப் பொய் பாவமில்லை!..."

" ஆனால் பொய்யே ஒரு வாணிகமாகி விடக்கூடாது..."

- இதற்கு மறுமொழி கூறாமல் அவளை நோக்கிப் புன்னகை பூத்த சாரகுமாரன்... "கண்ணுக்கினியாள்! நீயும் உன் பெற்றோர்களும் இங்கு எங்கே தங்கியிருக்கிறீர்கள்?" என்று அவளைப் பரிவுடன் வினாவினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/47&oldid=489946" இலிருந்து மீள்விக்கப்பட்டது