பக்கம்:கபாடபுரம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

கபாடபுரம்


எலுமிச்சைக் கனிகள் மரகதப்பசுமை போர்த்த இலைகளின் அடர்த்தியிலே நிலவொளியில் செய்து தொங்கவிட்ட தங்கப் பழங்களைப்போல் மிக அழகாகத் தோன்றும். குன்றுகளில் சாலைகளும், கிளைச் சாலைகளுமாக அங்கங்கேயிருந்த பல இரத்தினாகரங்களுக்குப் பிரியும் சிறு வழிகளுமாக இருக்கும்.

குன்றுகள் யாவற்றுக்கும் உயரமான இடத்திற்கு மகேந்திரமலை என்று பெயர் வழங்கி வந்தது. மணிமலை என்றும் மக்கள் அதைச் சொல்லி வந்தார்கள். மணிமலையில் சுற்றுப்புற மண்ணே சிவப்புப் பொடியாகவும், நீலப் பொடியாகவும், பச்சைப் பொடியாகவும் செய்து துவினாற்போல இரத்தினங்களில் நிறக்கலவையும் ஒளி வண்ணமும் செறிந்து தோன்றும். மணிமலை உச்சியிலிருந்து கீழே பார்த்தால் முதலில் கரையோரத்துப் புன்னைத் தோட்டமும், அப்புறம் நகரமும் கடலும் நிலவொளியில் மிகமிக அழகாகத் தோன்றும்.

அந்தக் காட்சியைப் பார்த்து நீண்ட நாளாகிவிட்டபடியால் குருகுலவாசத்திலிருந்து கோ நகருக்கு வந்து தங்கியிருக்கும் இந்த வேளையில் ஆவலோடு புறப்பட்டிருந்தான் சாரகுமாரன். முடிநாகனுக்கோ இளைய பாண்டியனுக்குத் துணையாகச் செல்ல வேண்டிய கடமையைத் தவிர பெரிய பாண்டியருக்காக இளையபாண்டியனோடு சென்று அவனைக் கண்காணிக்க வேண்டிய இரகசியப் பொறுப்பும் இருந்தது. எனவே முடிநாகனும் களைப்பைப் பொருட் படுத்தாமல் உடன் புறப்பட்டிருந்தான். அரச குடும்பத்தார் வழக்கமாக நகர் பரிசோதனைக்குப் போவது போன்ற எளிய கோலத்தில் அவர்கள் இருவரும் புறபட்டிருந்தனர். விழா இரவின் அமைதியிலும் நகர் பொலிவு மிகுந்திருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/52&oldid=489951" இலிருந்து மீள்விக்கப்பட்டது