பக்கம்:கபாடபுரம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

கபாடபுரம்


மகேந்திர மலைக் குன்றுகளில் நீர்வளம் அதிகம். ஈரப்பாங்கான அந்த மண்ணில் கைகளால் அகழ்ந்து சிறுகுழி தோண்டினால் கூட நீர் பெருகிவிடும். கிணறுகள் போல் வெட்டப்பட்ட குழிகளில் விரைந்து ஊறும் நீரை உடனுக்குடன் மேலே இறைத்துக் கொட்டினால்தான் தோண்டுகிறவர்களுக்கும் கற்களை வாரிப் பெரிது சிறிதாகச் சலித்து எடுக்கிறவர்களுக்கும் வசதியாயிருக்கும். அவ்வாறு நீர் இறைத்துக் கொட்டுவதற்காக மிடா மிடாவாய்க் கவிழ்த்துக் கிடந்த செப்புச் சால்கள் அங்கங்கே தோன்றின.

கீழே கோ நகரில் விழா நிகழும் காலமாகையினால் இரத்தினாகரங்கள் எனப்படும் இரத்தினச் சுரங்கங்கள் இருந்த மகேந்திர மலைக் குன்றுகள் வெறிச்சோடியிருந்தன. உடம்பில் மண்ணும் சேறும் படக் குழிகளில் இறங்கி வேலை செய்யும் பணியாளர்களின் கூட்டமும் அவரவர்களுக்குக் கட்டளையிடும் இரத்தின வணிகர்களாகிய சீமான்களின் கூட்டமுமின்றி மகேந்திர மலையே வறுமையாகிப் போய்விட்டது போலிருந்தது. அந்த இரவின் ஒடுக்கத்தில் குன்றுப் பகுதிகளில் எங்கோ நரிகள் ஊளையிடும் ஓசையையும் கீழே கடலலையோசையையும் தவிர வேறு ஆரவாரங்கள் இல்லை.

சிறிது நேரம் மகேந்திரமலைக் குன்றுகளில் சுற்றிவிட்டு அப்புறம் கடற்கரைப் புன்னைமரத் தோட்டத்தின் பக்கமாகச் சென்று அங்குத் தங்கியிருக்கும் பாணர்களும் விறலியர்களும், ஒருவிதமான குறைவுமின்றித் தங்கியிருக்கிறார்களா என்பதைக் கவனித்துவிட்டு அப்புறம் கோட்டைக்குள் போய் அகநகரில் அரண்மனையை அடையலாம் என்று புறப்படும்போது எண்ணியிருந்தான் இளையபாண்டியன். ஆனால், மகேந்திரமலைக் குன்றுகளில் சுற்றிவிட்டுத் திரும்பும்போதே அதிக நேரமாகிவிட்டது. திரும்பி வரும்போது தற்செயலாக முடிநாகனிடம் வினாவினான் சாரகுமாரன் :

"கோ நகரிலோ நமது கடற்பகுதிகளிலோ குறும்பர்களின் தொல்லைகள் இப்போதும் இருக்கின்றனவா? அல்லது அவர்கள் அடங்கி வழிக்கு வந்து விட்டார்களா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/54&oldid=489953" இலிருந்து மீள்விக்கப்பட்டது