பக்கம்:கபாடபுரம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

கபாடபுரம்


நீர்க்கழிகளின் கரையிலே வரிசையாக அடர்ந்து செழித்திருந்த தாழம் புதரில் பூக்கள் நிறைய மடலவிழ்ந்ததன் காரணமாகவோ என்னவோ, மணம் காற்றில் மிதந்து வந்து புன்னைத் தோட்டத்தை நிறைத்தது. அந்தப் பெண்ணைப் பற்றி நினைவு கூர்ந்த வேளையும் இந்தத் தாழம்பூ நறுமணத்தை உணர்ந்த வேளையும் ஒன்றாயிருந்த மங்கலத்தை எண்ணிச் சாரகுமாரன் தனக்குள் வியந்து கொண்டான்.

அதையடுத்துப் புறநகரில் கடைசியாக அவர்கள் புகுந்த பகுதி கடலிற் குளித்த முத்துக்களைப் பல்வேறு வணிகர்கள் திரட்டி வைத்திருந்த கிடங்குகளாகிய பண்டசாலைகள் நிறைந்த வீதியாகும். ஒவ்வொரு பண்டசாலையும் முன்புறம் வீதியை நோக்கிய வாயிலும், பின்புறம் பள்ளத்தில் படியிறங்கினால் அப்படியே கடலில் படகுகள் மூலம் மரக்கலங்களுக்கு ஏற்றி அனுப்ப வசதியுள்ளதாகவும் அமைந்திருந்தன. நகரணி விழாவுக்காகப் பண்டசாலைகள் மூடப்பெற்றுக் கலகலப்பின்றி இருந்ததனால் அப்பகுதி இருண்டுகிடந்தது. புறப்படும்போது, 'இளையபாண்டியர் நகர் பரிசோதனைக்குப் போய் வர ஆசைப்படுகிறார். நானும் உடன் போய் வருகிறேன் - என்று பெரியவரிடம் சொல்லிக் கொண்டு அவர் அநுமதியுடன்தான் புறப்பட்டிருந்தான் முடிநாகன். அதனால் அவன் நேரமாவதைப்பற்றிக் கவலைப்படாமல் சாரகுமாரன் போகிற இடங்களுக்கெல்லாம் உடன் போனான்.

'அரசகுடும்பத்துக் கடமைகளைப் பழகிக் கொள்வது போன்ற எந்தச் செயலை இளையபாண்டியர் செய்தாலும் பெரியவர் அதைத் தடுக்கமாட்டாரென்பது முடிநாகனுக்குத் தெரியும். விலையுயர்ந்தவையும், பெருமதிப்புள்ளவையுமான முத்துக்களடங்கிய பண்ட சாலைகள் உள்ள வீதியில் அவர்கள் செல்லும்போது சற்று முன் அவர்களிருவரும் எந்தக் கடற் கொலைஞர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்களோ, அதே கடற் கொலைஞர்கள் சிலரைச் சந்தேகத்துக்குரிய சூழ்நிலையில் சந்திக்க நேர்ந்தது. ஒரு பெரிய முத்துப் பண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/56&oldid=489955" இலிருந்து மீள்விக்கப்பட்டது