பக்கம்:கபாடபுரம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

59


இயந்திரப் பொறிகளால் நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த அந்த இடத்து மதிற்சவரிலிருந்து அடுக்கடுக்காக அம்புகள் பாயத் தொடங்கியபோது கீழே முத்துப் பண்டசாலையைக் கொள்ளையிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்த கடற்கொலைஞர்கள் திகைத்துப் பதுங்கலாயினர். கூரிய முனையுடன் கூடிய அம்பு மழையிலிருந்து தப்புவதற்காகப் பண்டசாலையின் சுவரோடு சுவராக ஒண்டிக்கொள்வதைத் தவிர அவர்களால் வேறெதுவும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

வில்லெறி வியன்பொறி - கல்லிடு கூடை போன்ற பல்வகை இயந்திரப் பொறிகள் அந்த மதிலில் அங்கங்கே அமைக்கப்பட்டிருந்ததைத் தக்கசமயத்தில் நினைவூட்டியதற்காக முடிநாகனைப் பாராட்டினான் சாரகுமாரன். இந்தச் சமயோசிதமான காரியத்தினால் முத்துப்பண்டசாலை கொள்ளை போகாமல் காப்பாற்றிய அவர்கள் அதேசமயத்தில் தங்கள் குதிரைகளைக் கொள்ளைபோக விடும்படி நேர்ந்தது. மதிலிலிருந்து எதிர்பாராத தாக்குதலைக் கண்ட கொலைஞர்களில் சிலர் பின்பக்கமாகக் கடலில் நிறுத்தியிருந்த படகுகளில் எறித் தப்பினர். வேறு சிலர் வீதிவழியே ஓடிவந்த போது மதிற் சுவரருகே நிறுத்தப்பட்டிருந்த இவர்களுடைய குதிரைகளில் ஏறித் தப்பிவிட்டனர். முத்துப் பண்டசாலையைக் காப்பாற்றிய பெருமையோடு தங்கள் பரிகளை இழந்து நடந்தே அரண்மனைக்குத் திரும்பினார்கள் முடிநாகனும் சாரகுமாரனும்.

மறுநாள் காலையில் விடிந்ததும் பாட்டனார் வெண்தேர்ச் செழியர் இளையபாண்டியனைச் சந்தித்தபோது கேட்ட முதல் கேள்வி, "இரவில் நகருலா முடிந்த பின்பும் நெடுநேரம் நீ திரும்பிவரவில்லையே? உன்னுடைய பள்ளியறையில் கூட உன்னைக் காணமுடியவில்லை. அவ்வளவு நேரம் எங்கே போயிருந்தாய்?" - என்பதுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/61&oldid=489978" இலிருந்து மீள்விக்கப்பட்டது