பக்கம்:கபாடபுரம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

கபாடபுரம்


மணிகளில் எழும்பிய ஒலியே செவிகளை அதிரச் செய்தது. கொலைஞர்கள் பஞ்சுப் பொதிகளைப் போட்டுவிட்டு ஒட்டமெடுத்தனர். மணியோசையோ நிற்காமல் அவர்களைத் துரத்தியது.

"இந்தக் கடற்பறவைகள் பகலில் மதிலிலும் கதவுக் குமிழ்களிலும்தான் அமர்வது வழக்கம். இரவில் மரத்திலிருந்து இவற்றைக் கிளப்பிவிட்டால் எப்போதும் உடன் இரை தேடும் வழக்கமான மாற்றிடமாக எதிரே மிக அருகிலிருப்பவை மதிற்கவரும் கபாடங்களுமே. இவை கபாடங்களின் குமிழ்களில் அமர்ந்தால் மணிஓசை கிளர்வதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். அதுதான் இதன் நுணுக்கமே தவிர இவற்றிற்கு நான் இப்படிச் செய்யும்படி மந்திரம் எதுவும் போடவில்லை இளையபாண்டியரே!" என்று முடிநாகன் அதைச் சாதாரணமாக விளக்கினாலும் - மந்திரம் போட்டு அனுப்பியதால்தான் அந்தப் பறவைகள் அப்படிச் செய்தன போல் இளையபாண்டியனுக்கு அது ஒர் அற்புதமாகவே தோன்றியது.

இந்தச் சாதுரியமான சிந்தனைக்காக முடிநாகனைத் திரும்பத் திரும்பப் பாராட்டினான் அவன். ஆனால் முடிநாகனோ அந்தப் பாராட்டெல்லாம் பெரியபாண்டியருக்குரியவை என்று பணிந்து விநயமாகத் தெரிவித்தான். பறவைகள் மணியொலி எழுப்பிய சிறிது நேரத்திற்கெல்லாம் கோட்டைக் காவல் வீரர்கள் வந்து கூடவிட்டதனால் கபாடங்களைப் பற்றிய கவலையை விட்டுவிட்டு ஒடிய அவுணர்களின் வழியில் அவர்களைப் பின்பற்றி மறைந்து மறைந்து நடந்தனர் இளையபாண்டியனும், முடிநாகனும். புறவீதியில் தாங்கள் குடியிருப்பிற்கு அண்மையில் இருந்த முரச மேடையினருகே சென்றதும் அங்கே இந்த அவுனர்களை எதிர் பார்த்து வேறு சிலரும் காத்திருப்பதைத் தொலைவிலிருந்த படியே கண்ட முடிநாகன் இளையபாண்டியருக்கு அதனைச் சுட்டிக்காட்டினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/72&oldid=489994" இலிருந்து மீள்விக்கப்பட்டது