பக்கம்:கபாடபுரம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

73


இரகசியங்களை அறிந்துகொள்ளத்துடிக்கும் துடிப்பும், துணிவும், ஆவலும், அதிகமாயிருந்தும் அவற்றை அடக்கிக்கொண்டு இருவரும் புறநகரிலுள்ள கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சென்றனர். குளிர்ந்த காற்று வீசும் மரங்களடர்ந்த புறநகர் விதிகள் இரவில் மிக வனப்பாயிருந்தன. யாருக்காகவோ உரத்த குரலில் அலைகளை எற்றி எற்றி அரற்றுவதுபோல் கடல் ஒசை தொலைவில் கேட்டுக்கொண்டிருந்தது! கடற்கரைக் கோடியில் உயரமான பாறை ஒன்றின் மேல் அமைந்திருந்த கலங்கரை விளக்கின் உச்சியில் விறகுகள் தீக்கொழுந்துகள் எழ எரிந்துகொண்டிருந்த காட்சியானது. அந்தரத்தில் பற்றி எரியும் செந்தீப்போல் தோற்றமளித்துக் கொண்டிருந்தது.

புறநகரப் புன்னைத் தோட்டத்தில் நிலா ஒளியிலும், கடற்காற்றிலும் உற்சாகமடைந்ததாலோ என்னவோ அங்கு வந்து தங்கியிருந்த பாணர்களும், விறலியர்களும், இசையிலும், கூத்திலுமாக உறங்காமற் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தனர். யாழொலியும், இசைக் குரலொலியும் ஆடும் பாதங்களின் அழகு ஒலியும் நிறைந்து கடற்கரைப் புன்னைத் தோட்டம் கந்தர்வலோகமாயிருந்தது. நகர் பரிசோதனைக்காகப் புனைந்துகொண்ட மாறு வேடங்களில் இருந்த காரணத்தால் கூட்டத்தோடு கூட்டமாக ஒதுங்கி நின்று சாரகுமாரனும், முடிநாகனும் அவற்றை எல்லாம் காண வாய்ப்பிருந்தது. நகரணி மங்கல நாளுக்காகக் கோநகருக்கு வந்திருந்த கலைஞர்கள் வந்த இடத்தில் தங்கள் சொந்த மகிழ்ச்சிக்காகத் தங்களுக்குள்ளேயே பாடிய பாடல்களும், இசைத்த இசைகளும், ஆடிய ஆட்டங்களும், இணையற்ற தரத்திலிருந்தன.

"நோக்கமும் பயனும் எதிர்பாராத எல்லையில் கலைகள் தான் எத்தனை அழகாயிருக்கின்றன பார்த்தாயா முடிநாகா! பரிசிலை எதிர்பார்த்து அரண்மனைக் கொலு மண்டபத்துக்கு வரும்போது இவர்களில் பலர் தரமிழந்து விடுகிறார்கள். சொந்த மனத்தின் திருப்தியையே ஒரு சித்தியாக எதிர்பார்த்து அதற்காக ஏங்கிக்கொண்டே படைக்கும்போது அந்தக் கலைத்திறனுக்கு இணை சொல்லமுடியாமல் அது உயர்ந்துவிடுகிறது பார்!" என்று முடிநாகனின் காதருகே மெல்லக் கூறினான் இளையபாண்டியன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/75&oldid=489998" இலிருந்து மீள்விக்கப்பட்டது