பக்கம்:கபாடபுரம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

கபாடபுரம்


'மணிபல்லவம்' - என்ற பெயரில் ஒரு வரலாற்றுப் பின்னணி யுடைய நாவல் புனைந்து விட்டேன். இப்போது பாண்டியர்களின் கபாடபுரத்தைப் புனையும் பணியில் இதை எழுத முனைந்திருக்கிறேன். கால முறைப்படிப் பார்த்தால் கபாடபுரத்தைத் தான் நான் முன்னால் எழுதியிருக்க வேண்டும். ஆயினும் கபாடபுரத்தை விடக் காவிரிப்பூம் பட்டினத்தைப் பற்றி அறிய வரலாறும் இலக்கியங்களும் நிறைய இருந்ததனாலும் கபாடபுரத்தைப் பற்றிய ஒர் இலக்கிய அநுமான ஒவியம் என் மனத்தில் வரையப்பெற்று முற்றுப் பெறச் சிறிது அதிக காலம் பிடித்ததனாலுமே இவ்வளவு காலந்தாழ்ந்தது. இம்முறையே சேரர் கோ நகரை விளக்கி அணி செய்தும் இனி ஒன்று பின்னர் எழுத எண்ணமிருக்கிறது. இனிமேல் இந்தக் கதையின் முகத்திற்கு வருவோம்.

முதலூழிக் காலத்தில் குமரிக் கண்டத்தில் குமரியாற்றங் கரையில் இருந்த தென் மதுரைத் தமிழ்ச்சங்கமும் பாண்டியர் கோ நகரமும் பல்லாயிரம் ஆண்டுகள் சிறப்பாய் அரசாண்டு கடல் கொள்ளப்பட்டு அழிந்த பின் பொருநையாறு கடலொடு கலக்கும் முகத்துவாரத்தில் கபாடபுரம் என்ற புதிய கோ நகரைச் சமைத்து ஆளத் தொடங்கினார்கள் பாண்டியர்கள்.

முத்தும் இரத்தினமும் ஏற்றுமதி செய்து - அற்புதமான பலவகைத் தேர்களைச் சமைத்து - இலக்கண இலக்கியங்களைப் பெருக்கி இந்த நகரை உலகெலாம் புகழ் பெறச் செய்த முதல் பாண்டிய மன்னன் வெண் தேர்ச் செழியன். பாண்டியர்களின் தேர்ப்படை இவன் காலத்தில் அற்புதமாக வளர்த்து உருவாக்கப்பட்டது. கபாடபுரத்தின் பெயர் பெற்ற வெண் முத்துக்கள் பதித்த பல அழகிய இரதங்கள் இவனுக்குரியனவாயிருந்தன என்று தெரிகிறது. வெண் முத்துக்கள் பதிக்கப் பெற்று ஒளி வீசும் பிரகாசமான ரதங்களில் வெள்ளை மின்னல்கள் போலும் ஒளிமயமான பல புரவிகளைப் பூட்டி இவன் அமைத்திருந்த தேர்ப்படையே இவனுக்குப் பின்னாளில் இலக்கிய ஆசிரியர்கள் ‘வெண்தேர்ச் செழியன்’ என்று சிறப்புப் பெயரளிக்கக் காரணமாயிருந்தது. கபாடபுரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/8&oldid=489907" இலிருந்து மீள்விக்கப்பட்டது