பக்கம்:கபாடபுரம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

81


பாழாக்கிவிடும். இதை நன்றாக நினைவு வைத்துக்கொள்ளுங்கள். நகரத்தைப் பரிசோதிக்க நீங்கள் புறப்பட்டுச் சென்றால் உங்களைப் பரிசோதிக்க நான் பின் தொடர்ந்ததில் தவறென்ன?" - என்று பெரியவர் சிறிது கடுமை குறைந்து ஆறுதலாகப் பேசத் தொடங்கிய பின்பே இருவரும் தலை நிமிர்ந்தனர்.

"தவறு உன்னுடையதில்லை குழந்தாய்! அரச குடும்பத்துப் பிள்ளைகளுக்கு அளவுமீறிய கலை உணர்வு ஆகாது உன் தாய் வழிவந்த இசை ஞானமும், நம் புலவர் பெருமக்கள் கடமையைக் கற்பிப்பதைவிட கலையை உனக்கு அதிகமாகக் கற்பித்திருப்பதுமே இதற்குக் காரணம். இசையும் கூத்தும் காமத்தின் இரு கதவுகள். அவற்றைக் கேட்கலாம். காணலாம். கதவுகளை உடைத்துக்கொண்டு புக முயலாதார் மிகவும் குறைவு. உன்னைக் காண நான் நாணப்படுகிறேன். இனி நீ இலக்கண இலக்கியங்களைக் கற்றதைவிட அதிகமாக அரச தந்திரங்களையும், போர்த்துறை நுணுக்கங்களையும் கற்க வேண்டும். உன்னுடைய கல்வியில் விரைவாக ஒரு மாறுதல் வேண்டும். இல்லாவிட்டால் நீ ஆட்சிக்குப் பயன் படாதவனாகிவிடுவாய்" என்று மீண்டும் அழுத்தமாகக் கூறினார் பெரியவர். முடிநாகன் ஏதோ பதில் கூறுவதற்கு முயன்றான். அவர் அவனைப் பேச விடவில்லை.

"இசையினால் விருப்பம் மிகுகிறது. விருப்பம் மிகுந்தால் கடமையுணர்வு குன்றுகிறது. கடமையுணர்வு குன்றினால் ஆசை பிறக்கும். ஆசையின் முடிவில் பொறுப்புக்கள் மறந்துபோகும். அரச குடும்பத்துப் பிள்ளைகள் நல்ல விதை நெல்லைப் போன்றவர்கள். அவர்களிலிருந்து எவ்வளவோ கடமைகள் பயிராகி வளரவேண்டும். அவர்கள் சரிதத்தில் நிற்கக்கூடியவர்கள். சரிதம் அவர்களை ஒரு மூலையில் நிறுத்திவிட்டுப் போய்விடும்படி ஆகிவிடக்கூடாது." கூறிவிட்டு மேலே ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார் பெரியவர். அவர்களிருவரும் தயங்கித் தயங்கி நடந்தபடியே சிந்தனையோடு பள்ளிமாடத்திற்குள் நுழைந்தனர். இருவருமே அன்றிரவு உறங்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/83&oldid=490006" இலிருந்து மீள்விக்கப்பட்டது