பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

கபோதிபுரக்


“மருந்து கொடுக்கிறேன். ஆனால் மருந்து மட்டும் வேலை செய்தா போதாது. அந்தப் பெண்ணுக்கு மனோவியாகூலம் இருக்கக்கூடாதே. அதுக்காக என்ன மருந்து தரமுடியும். நான் ஜூரம் தீர மருந்து தருவேன். குளிர்போக குளிகை கொடுப்பேன். காய்ச்சல் போக கஷாயம் தருவேன். ஆனால், சாரதாவின் மன வியாதியைப் போக்க நான் எந்த மருந்தைக் கொடுப்பது. தம்பீ, சரியான ஜோடி நீதான். சாரதாவுக்கு மருந்தும் நீயே” என்றான் வைத்தியன்.

தன் சாரதாவைப் பற்றி இவ்வளவு கிண்டலாக ஒரு வைத்தியன் பேசுவதா – அதிலும் தன் எதிரிலே பேசுவதா என்று கோபம் வந்துவிட்டது பரந்தாமனுக்கு. ஓங்கி அறைந்தான் வைத்தியனை.

“படவா மருந்து கேட்க வந்தால் வம்புதும்புமா பேசுகிறாய். யார் என்று என்னை நினைத்தாய்” என்று திட்டினான்.

வைத்தியன், வெறி தெளிந்து “அடே தம்பி நான் வேடிக்கை பேசினேன் கோபிக்காதே. இந்தா மருந்து” என்று சொல்லிவிட்டு மருந்து கொடுக்கச் சென்றான்.

வைத்தியனை, கோபத்திலே, பரந்தாமன் அடித்துவிட்டானே தவிர அவனுக்கு நன்றாகத் தெரியும் வைத்தியன் சொன்னதிலே துளிகூட தவறு இல்லை என்று. சாரதாவின் நோய் மன வியாதிதான் என்பதிலே சந்தேகமில்லை. அது அவனுக்குத் தெரிந்ததுதான். பிறர் சொல்லும்போதுதான் கோபம் வருகிறது. அதிலும் சாரதாவைக் கிண்டல் செய்வதுபோலக் காணப்படவேதான் கோபம் மிக அதிகமாகிவிட்டது ஆழ்ந்து யோசிக்கும்போது, அந்த வைத்தியர் மட்டுமல்ல, ஊரில் யாரும் அப்படித்தானே பேசுவார்கள். நேரில் பேச பயந்துகொண்டு இருந்துவிட்டாலும்