பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

கபோதிபுரக்


தில் அதுதான் கிடைத்தது. அதை ஒரு முழுங்கு சாரதாவுக்குக் குடிப்பாட்டினாள். சாரதாவுக்குப் பாதி உயிர் வந்தது. தன்னால் வந்த வினை இதுவெனத் தெரியும் சாரதாவுக்கு. ஆகவே, அவள் தாயிடம் ஏதும் பேசவில்லை. தாயும் ஒன்றும் கேட்கவில்லை. வேறு இரவிக்கையைப் போட்டுக்கொண்டாள். ‘என் பொன்னே! உன் பொல்லாத வேளை இப்படிப் புத்திகொடுத்ததடி கண்ணே’ என்று அழுதாள் வேதம். சாரதா படுக்கையில் சாய்ந்துவிட்டாள். தாயின் கரத்தைப் பற்றிக்கொண்டு, “அம்மா! நான் என்ன செய்வேன் நான் எதை அறிவேன், என் நிலை உனக்கு என்ன தெரியும்” என்று மெல்லிய குரலில் கூறினாள். தாய் தன் மகளைத் தொட்டுப் பார்த்துவிட்டு, “காலையில் ஜுரம் விட்டுவிடும், இப்போதே வியர்வை பிடிக்க ஆரம்பித்துவிட்டது” என்று கூறினாள்.

“என் ஜுரம் என்னைக் கொல்லாதா! பாவி நானேன் இனியும் உயிருடன் இருக்கவேண்டும். ஊரார் பழிக்க உற்றார் நகைக்க, கொண்டவர் கோபிக்க, பெற்றவர் கைவிட நான் ஏன் இன்னமும் இருக்கவேண்டும், ஐயோ! அம்மா! நான் மாரி கோவிலில் கண்ட நாள்முதல் அவரை மறக்கவில்லையே. எனக்கு அவர்தானே மணவாளான் என நான் என் மனத்தில் கொண்டேன். என்னை அவருக்கே நான் அன்றே அர்ப்பணம் செய்துவிட்டேனே. அவருக்குச் சொந்தமான உதட்டை நீங்கள் வேறொருவருக்கு விற்கத் துணிந்தீர்கள். அவர் கேட்டார் அவர் பொருளை. நான் தந்தேன். அவ்வளவுதான். உலகம் இதை உணராது. உலகம் பழிக்கத்தான் பழிக்கும். என்னைப் பெற்றதால் நீங்கள் என் இப்பாடுபடவேண்டும் அந்தோ மாரிமாயி, மகேஸ்வரி, நீ சக்தி வாய்ந்தவளாக இருந்தால் என்னை அழைத்துக்கொள். நான் உயிருடன் இரேன், இரேன், இரேன்”— என்று கூறி அழுதாள்.