பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

29


நாட்கள் பல கடந்தன. வாரங்கள் உருண்டன. மாதங்களும் சென்றன. சாரதாவின் ஜுரம் போய்விட்டது. ஆனால் மனோ வியாதி நீங்கவில்லை. அவளைக் கணவன் வீட்டுக்கு அழைத்துக் கொள்ளவில்லை. பரந்தாமன் மனம் உடைந்து தொழிலைவிட்டு பரதேசியாகி ஊரூராகச் சுற்றினான். சாரதாவின் தாயார், தனது மருமகப்பிள்ளையைச் சரிப்படுத்த எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

இந்நிலையிலே, சாரதாவைப்பற்றி ஊரிலே, பழித்தும் இழித்தும் பேசத் தொடங்கினார்கள். இதுவும் அவள் காதில் விழுந்தது. அவள் கவலை அதிகமாகிவிட்டது.

கடைசியில், காரியஸ்தன் கருப்பையாதான் கைகொடுத்து உதவினான். மெல்ல மெல்ல, மந்திரம் ஜெபிப்பதுபோல ஜெபித்து, “ஏதோ சிறுபிள்ளைத்தனத்தில் துடுக்குத்தனத்தில் நடந்துவிட்டது. இனி ஒன்றும் நடவாது. சாரதாவை அவள் வீட்டிலேயே விட்டு வைத்தால் ஊரார் ஒரு மாதிரியாகப் பேசுகிறார்கள்” என்று மெதுவாக சாரதாவின் புருஷனிடம் கூறினான். சாரதாவின் கணவன் உள்ளபடி வருந்தினான். வருத்தம்போக மருந்து தேடினான். அவனுக்கு அபின் தின்னும் பழக்கம் கற்றுக் கொடுக்கப்பட்டுவிட்டது! மாலையில் அபினைத் தின்றுவிட்டு, மயங்கி விழுந்துவிடுவான். இரவுக் காலத்தில் கவலையற்றுக் கிடக்க, அபினே அவனுக்கு உதவிற்று.

கருப்பையாவின் முயற்சி கொஞ்சம் கொஞ்சமாகப் பலிக்க ஆரம்பித்தது. ஊரில் திருவிழா வந்தது. திருவிழாக் காலத்தில் உறவினர்கள் வருவார்கள். அந்த நேரத்தில் சாரதா வீட்டில் இல்லாவிட்டால், கேலியாகப் பேசுவார்கள் என்று கூறினான். “ஆனால் நீயே போய் அவளை அழைத்து வா” என்று கூறினான். காரியஸ்தன்