பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

37


எண்ணினாள் சாரதா. சாரதா புது உருவெடுத்தாள் உடையிலே. தேடித்தேடி அணிந்தாள். நகைகள் புதிதாகப் போட்டாள். ஒரு நாளைக்குப் பத்துமுறை முகத்தை அலம்புவாள், நிமிடத்திற்கொருமுறை கண்ணாடி முன் நிற்பாள். வலியச்சென்று புருஷனிடம் கொஞ்சுவாள். அவள் சரசம்புரியத் தொடங்கினாள். கிழக்கணவன் அவள் வலையில் வீழ்ந்தான். கேட்டதைத் தந்தான். சாரதாவே கண்கண்ட தெய்வம் என்றான். ஆனால் அவன் அறியான் பாபம், அவள் கற்பை இழந்த சிறுக்கியானாள் என்பதை.

மயிலும் மாதரும் தமது அழகைப் பிறர் காணவேண்டுமென்ற எண்ணத்துடன் இருப்பதாகக் கவிகள் கூறுவர். மயிலின் தோகை அவ்வளவு வனப்புடன் இருக்கும்போது அது பிறர் கண்களுக்குத் தெரியாமல் மறைந்து கிடப்பின் பயன் என்ன? கண்டோர் மனத்தில் களிப்பை உண்டாக்கும் ஒப்பற்ற பணியை அழகு செய்கிறது. அந்த அழகு, அன்றலர்ந்த பூவிலுண்டு! அந்தி வானத்திலுண்டு. அதரத்தில் தவழும் அலங்காரப் புன்சிரிப்பிலுண்டு, கிளியின் கொஞ்சுதலில், குயிலின் கூவுதலில், மயிலின் நடனத்தில், மாதரின் சாயலில் உண்டு! சிற்பத்தில் உண்டு. ஆனால் அதன் சிறப்பை முழுதும் காணவல்லார் மிகச்சிலரே. ஆனால் மாதரின் எழில் அத்தகையதன்று. அது கண்டவரை உடனே களிக்கவைக்கும் தன்மையது. காற்று வீசும்போது குளிர்ச்சி தருகிறேன் பாரீர் எனக் கூவுமா! அதன் செயல் நமக்கு அந்த இயற்கையான எண்ணத்தை உண்டாக்கும். அதுபோலவே, எந்த மாதும், ‘என் அழகைக் கண்டாயோ!’ எனக் கேளார், ஆனால் தம் அழகைப் பிறர் கண்டனர், களித்தனர் என்பது அவர்களுக்குத் தெரியும். அதிலே பூரிப்பும் பெருமையும் அடையாத பெண்கள் மிகமிகச் சொற்பம்.

ஆனால், அழகு, களிப்பதற்கு எங்ஙனம் உதவுகிறதோ அதைப்போலவே பிறரை அழிக்கவும் செய்-