பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

7


பிள்ளைக்கு மணம் செய்து கொடுக்கத் துணிந்ததும் அவளுக்குத் தெரியும். தனது குடும்ப கஷ்டத்தைப் போக்க வேண்டுமென்பதிலே சாரதாவுக்குத் திருப்திதான். ஆனால். கிழவனுக்குப் பெண்டாக வேண்டுமே என்றெண்ணும்போது, குடும்பமாவது பாழாவது. எங்கேனும் ஒரு குளத்தில் விழுந்து சாகலாமே என்று தோன்றும். இது இயற்கையல்லவா!

இப்படிப்பட்ட பொருத்தமில்லாத ஜோடிகளைச் சேர்ப்பதற்காக யார் என்ன செய்கிறார்? ஊரார் கேலியாகப் பேசிக்கொள்வார்களே யெழிய, இவ்விதமான வகையற்ற காரியம் நடக்கவொட்டாது தடுக்கவா போகிறார்கள். கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருஷன் என்று பழமொழி இருக்க, கல்லோ புல்லோ அல்லாத மாரியப்பபிள்ளைகள் சாரதாவை மணமுடித்துக்கொடுக்க இருப்பார்களோ!

அதிலும் மாரியப்ப பிள்ளை ஓர் ஏழையாக இருந்தால் “கிழவனுக்கு எவ்வளவு கிறுக்கு பார்தீர்களா! காடு வாவா என்கிறது. வீடு போபோ என்கிறது, கிழவன் சரியான சிறுகுட்டி வேண்டுமென்று அலைகிறானே. காலம் கலிகாலமல்லவா” என்று கேலி செய்வார்கள். மாரியப்பபிள்ளையோ பணக்காரர். எனவே அந்த ரமணி, சாரதா, சமூகத்தில் வளர்த்துவிடப்பட்ட பழக்கத்துக்குத் தனது அழகையும் இளமையையும் பலிகொடுக்கப் போகிறார். இவ்விதம் அழிந்த ‘அழகுகள்’ எவ்வளவு! தேய்ந்த இளமை எத்துணை!!

சாரதாவுக்குப் பிசாசு பிடித்துக்கொண்டது என்று அவளின் பெற்றோர் எண்ணினார்கள். அவளுக்கா பிசாசு பிடித்தது? அல்ல! அல்ல! மாரியப்பபிள்ளை பிடித்துக்கொள்ளப் போகிறாரே என்ற பயம் பிடித்துக்கொண்டது. பாவை அதனாலேயே பாகாய் உருகினாள்.