பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

79


புரிக்கு. சம்மதங் கொடு பரந்தாமனுக்கு. அவன் உனக்குப் புத்துலக இன்பத்தை ஊட்டுவான். அவனுக்கு நீ தேவை. உனக்கு அவன். நீங்கள் இருவரும் தனி உலகில் வாழுங்கள். சாதாரண உலகைப் பற்றி கவலை ஏன்! பழிக்கும் சுற்றத்தார் இழித்துப் பேசும் பழைய பித்தர்கள், கேலி செய்யும் குண்டர்கள், கேவலமாக மதிக்கும் மற்றையோர், என்ன சொல்வாரோ என்பதைப் பற்றி நீ கவலைப்படாதே.

அவன் கபோதிதான்! ஆனால் அவனுக்குத்தான் தெரியும் உன்னை இன்பபுரிக்கு அழைத்துச் செல்ல. பிடித்துக் கொள் அவன் கரத்தை. அவன் குருடன்! எனவே உலகின் காட்சிகள் எதுவும் அவனுக்கு இனி தெரியாது. ஆனால் உன்னை மட்டும் அவன் அறிவான். பிறவற்றைப் பார்க்கவொட்டாதபடி தடுக்கவே பார்வை அவனை விட்டுச் சென்றும்விட்டது” – என சாரதாவுக்கு விநாடிக்கு விநாடி காணும் காட்சிகள் யாவும் உணர்த்துவித்தன.

விதவை சாரதாவுக்கும் விதியிழந்த பரந்தாமனுக்கும் மணம் நடந்தேறியது.

வீதி மூலைகளில் வீணர்கள் வம்பு பேசினர். சமையற்கட்டுகளில் பெண்டுகள் சகலமும் தெரிந்தவர்கள்போலக் கேலி செய்தனர். வைதீகர்கள் வந்தது விபரீதம் எனக் கைகளைப் பிசைந்தனர். உற்றார் உறுமினர். ஆனால், கபோதிபுரக் காதலை, இனி யாராலும் தடுக்கமுடியாது. அவர்கள் இன்பபுரி சென்று இன்பத்துடன் வாழ்ந்து வரலாயினர்.