பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

99

தணியுமெங்கள் சுதந்திர தாகம்” என்ற கவிதையை வ.உ.சி. எப்போதும் விரும்பிக் கேட்பார். “உலகப்போர் வர இருக்கிறது. அப்போது தேர்தலில் வெற்றி பெறும் ஆங்கிலக் கட்சியினர் நிச்சயமாக இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுப்பார்கள் என்று அவர் மரணப்படுக்கையின் போது கூறினார். சிதம்பரனார் கூறியபடியே நடந்தது.

சொல்லொணா வேதனைகளையும், துன்பங்களையும அனுபவித்த சிதம்பரனாருக்கு உடல் பிணிகளின் உள்தாக்குதல்கள் அதிகம் காணப்பட்டதால், மருத்துவர்கள் அவர் நோயை இன்னது என்று அறிய முடியாமல் அவரைக் கைவிட்டு விட்டார்கள். தன்நிலை இன்னது எனது அறியா நிலையில் வீரப் பெருமகன் விழிகளிலே இருந்து நீர்த்துளிகள் சிதறி வீழ்ந்த வண்ணம் இருந்தன.

‘எந்த சுதந்திரத்தைக் காண வேண்டும் என்று எனது ஆயுளைச் செலவழித்தேனோ, அந்த சுதந்திரத்தைக் காண முடியாமல் கண்மூடுகிறேனே’ என்று சிதம்பரனார் சாவதற்கு முன்பு ‘நா’ தடுமாறிக் குழறினார். கவியரசர் பாடிய தேசியப் பாடல்களைப் பாடுமாறு அவர் கேட்ட போது அருகே உள்ளவர்கள் பாடினார்கள். அந்தப் பாடல்களைப் பாடிக் கொண்டே இருக்கும்போது 1936-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாளன்று நள்ளிரவில் கப்பலோட்டிய வீரத் திருமகன் சிதம்பரம் பிள்ளை மறைந்தார். பாரதமாதாவின் சுதந்தரத்துக்காக சிதம்பரனாருடன் இணைந்து அரும்பாடுபட்ட அவரது தேசிய நண்பர்களை கைகூப்பி வணங்கி விடைபெற்றுக் காலத்தோடு மறைந்தார்.