பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

107

புதிய அறங்களைக் கூறி வழி நூலாக வழிகாட்டினார்! எடுத்தக்காட்டாக, துணையிழந்தாரை மணப்பது புண்ணியம் என்று விதவை வாழ்வைப் போற்றி அறம் கூறியவர் அவர்.

மங்கையர் மற்ற ஆண்களை மறந்தும் நாடக் கூடாது என்பதற்கேற்றவாறு, ஆண்களும் மற்றப் பெண்களை மறந்தும் நாடுவது பெரும் பாதகம் என்று கூறிய நெறியாளர் சிதம்பரம் பிள்ளை. இவையெல்லாம் ‘மெய்யறம்’ நூலிலே படித்துச் சிந்திக்கலாம். சமயப் பழக்கவழக்கங்களிலே சில சந்தர்ப்பவாத ஆன்மிகர்களால் புகுத்தப்பட்ட ஆன்மிகக் கோட்பாடுகளையும் அவர் சாடி தனது புரட்சி மனப்பான்மையைக் காட்டியுள்ளார்.

திருக்குறள் என்ற வாழ்வியல் மறைக்குப் பரிமேலழகர் சில குறட்பாக்களுக்கு நேர் பொருள் கொள்ளாமல், மாறுபட்ட உரைகளைக் கண்டுள்ளார் என்று எண்ணிய சிதம்பரம் பிள்ளை, மற்றோர் திருக்குறள் உரையாசிரியரான மணக்குடவரை மனமாரப் பாராட்டி, வள்ளுவர் உள்ளத்தை உணர்ந்தவர் மணக்குடவரே என்று போற்றி, மணக்குடவர் உரையைத் திருத்தமாக வெளியிட்டவர் சிதம்பரம் பிள்ளை.

திருக்குறள் நூல் அறிஞர்களுக்காக மட்டுமே எழுதிய வேத நூலல்ல. எல்லா வகையினரும் எளிதாக உணர்ந்து கொள்ள வேண்டிய வாழ்வியல் புதையல் நூல் என்றுணர்ந்து, எளிய விளக்க உரை ஒன்றைத் திருக்குறளுக்கு எழுதிய தமிழ்த் தொண்டர் சிதம்பரம் பிள்ளை.

திருவள்ளுவரின் திருக்குறள், சிவஞான போதம், கைவல்ய நவநீதம் என்ற நீதி நூல்களிலும், சித்தாந்த நூல்களிலும்,