பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

கப்பலோட்டிய தமிழன்


சிதம்பரனார், தனது குடும்பத்துக்குத் துணையாக, ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த ராமைய தேசிகர் என்பவருக்கு தம் இல்லத்தில் இடமளித்துக் காப்பாற்றி வந்தார். அவர் கண்களின் ஒளி இழந்தவர்; ஆனால், அந்த ஞானி அகக்கண்களை இழக்காத ஆன்மிகவாதியாக இருந்தார். அத்தகைய கண்பார்வை இழந்தவருக்கு சிதம்பரனார் இல்லத்தரசி அன்புடன், மனிதாபிமான நேயத்துடன் அவருக்குரிய பணிவிடைகளை முகம் சுளிக்காமல் நாள்தோறும் செய்து வருவார்!

உறவினர்களும் - அக்கம் பக்கத்தவர்களும் இதைக் கண்டு ஊமையாக இருப்பார்களா? இழிகுலத்தானை வீட்டில் வைத்துள்ளார்கள் என்று துற்றி வந்தார்கள்.

சிதம்பரம் தனது மனைவியிடம் கூறினார். அதற்கு அந்த மாதரசி, ‘துறவிக்குக் குலம் ஏது? உயிர்தேன்றும் இறைவன் உறைந்திருக்கிறான் என்று எனக்குக் கூறியது தாங்கள்தானே! தூற்றுவார் தூற்றட்டும். அவர்கள் ஒரு நாள் போற்றும் காலம் வரும். பொறுத்திருப்போம், நல்வழி நடப்போம்’ என்று பதிலளித்தார்.

இத்தகைய ஓர் அபூர்வ மங்கை திடீரென ஏற்பட்ட நோய் காரணமாக உயிர் நீத்தார்! எப்படி இருக்கும் சிதம்பரனாருக்கு? கவலையே உருவான கடலாக வாழ்க்கையோடு அலைமோதி சிதம்பரம் வாழ்ந்தார் இருப்பினும் காலம் அவர் மனத்தை மாற்றியது. அந்த வள்ளியம்மையாரின் குடும்பத்திலேயே அவரது தந்தையார் வேறோர் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார். அந்த அம்மையார் பெயர் மீனாட்சி. இருவரும் இல்லறவாழ்வில் இணைபிரியா மனமுடன் வாழ்ந்து வந்தார்கள்.