பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

29


இதே நேரத்தில் வங்காளத்தை இரு பிரிவாகப் பிரித்த ஆங்கிலேயரது ஆட்சியை எதிர்த்து நாடெங்கும் பலத்த மக்கள் எதிர்ப்பு பலமாக உருவானது. இதைச் சமாளிக்க ஆட்சி எல்லா அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விட்ட பிறகும் கூட நாட்டில் ஆங்கிலேயர் எதிர்ப்பு அதிகமாகவே உருவானது. இந்த நேரத்தில்தான் சிதம்பரனார் ஆங்கிலேயரின் வாணிபச்சுரண்டல் மீதான் எதிர்ப்பை மக்கள் இடையே மிகப் பலமாக உருவாக்கிக் கொண்டிருந்தார்.

ஆனால், வெள்ளையர்களது ஆட்சி எங்கே பலவீனமாகி விடுமோ என்று பயந்த ஆங்கிலேயருடன், பிரிட்டிஷ் கம்பெனி முதலாளிகளும், ஆங்கிலேய அரசு அதிகாரிகளும் ஒன்று சேர்ந்து, சிதம்பரனாரின் சுதேசிக் கப்பல் நிறுவனத்தை அழிக்க மூர்க்கத்தனமான முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

வாலர் என்ற ஓர் ஆங்கிலேய சப்மாஜிஸ்திரேட் என்பவர், இந்திய அதிகாரிகள் எவரும் சுதேசிக் கப்பலில் பிரயாணம் செய்யக் கூடாது என்ற ஓர் இரகசிய சுற்றறிக்கையை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைத்தார்.

இதன் எதிரொலியின் முதல் பிரச்சனையாக, ஆங்கிலேய அதிகாரிகள் இந்தியப் பயணிகளை மிரட்டினார்கள். சுதேசிக் கப்பல்களில் பயணம் செய்யக் கூடாது என்று அதிகார வர்க்கத்தினர் கெடுபிடிகளைச் செய்தார்கள். அதே நேரத்தில் இந்திய அதிகாரிகள் சுதேசிக் கப்பலின் வளர்ச்சிக்கு உதவக் கூடாது என்று பகிரங்கமாகவே வெள்ளையர்கள் செயல்பட்டார்கள்.

இந்த அதட்டலையும் மிரட்டலையும் கண்டு அச்சப்பட்ட இந்திய அதிகாரிகளில் பலர், பொய்க் காரணங்களைக் கூறி