பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

33

இந்தியா சுதந்திரம் பெற வேண்டும், அந்நிய ஆட்சி அறுத்தெறியப்பட வேண்டும், பல்துறைகளிலும் பாரதம் முன்னேற வேண்டும், மக்கள் வாழ்க்கைத் தரம் வளம் பெற வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் மகா சபையிலே சேர்ந்தார் சிதம்பரனார்!

இந்திய விடுதலைக்காக தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் நாட்டுக்கும், நாட்டு மக்களது வாழ்வுக்கும் தியாகம் செய்வது ஒன்றே தனது பிறப்பின் கடமை என்ற வாதப் பிரதிவாதத் தேச பக்தர் போர்க் கோலத்தோடு திருநெல்வேலி மாவட்டம் முழுவதுமாக வலம் வந்தார். ஒவ்வொரு மேடையிலும் முழக்கமிட்டார்.

ஆங்கிலேயரின் ஆணவ ஆர்ப்பாட்ட ஆட்சி நமக்குத் தேவையா? என்று கேட்டார் மக்கள் சொற்படி நடக்கும் ஒரு மக்களாட்சிதான் நமக்குத் தேவை என்பதற்கான காரண காரியங்களை மக்களிடையே விளக்கிப் பேசினார்.

அகில இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபையிலே சேர்ந்த அவர், ஆண்டுதோறும் வடநாட்டில் நடைபெறும் மகா சபை மாநாடுகளுக்குச் சென்று, வடநாட்டில் என்ன நடக்கின்றது? தென்னாட்டில் எப்படி அவை நடக்க வேண்டும்? என்ற திட்டங்களோடு அவர் திரும்பி ஊர் வருவார்

வடநாட்டின் மகா சபைக் கூட்டங்களிலே வழக்குரைஞர்களே அதிகமாகக் கலந்து கொண்டு, அவர்கள் பணக்காரர்களாக இருந்தாலும் தேச பக்தியோடு செயலாற்றுவதைப் பார்த்து, சிதம்பரனாருக்குள்ளும் அந்த பரபரப்பு உணர்ச்சி ஊடுருவி விட தீவிரவாதியாக உருவெடுத்தார் - அரசியலில்!